சீர்திருத்த பள்ளிக்கு அழைத்து சென்ற வழியில் சிறுவன் தப்பியோட்டம்

 

விக்கிரவாண்டி, ஜூன் 11: சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அழைத்து செல்லும் வழியில் போலீசாரிடம் இருந்து தப்பியோடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை நீதிமன்றத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவனை போலீசார் நேற்று முன்தினம் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு பேருந்தில் அழைத்து சென்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பேரணி என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் நிறுத்திவிட்டு சாப்பிட்டுள்ளனர். பின்னர் பேருந்தில் ஏறும்போது, போலீசாரை தள்ளிவிட்டு சிறுவன் தப்பி ஓடினான். போலீசார் அவனை பிடிக்க சென்றபோது, அருகில் இருந்த சவுக்கு தோப்பு வழியாக சென்று மாயமானான். இது குறித்து விக்கிரவாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று கடந்த 3 மாதங்களுக்கு முன், பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை அனுபவித்து வந்தவரை, மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு வரும் போது பேரணி ஓட்டலில் சாப்பிட்டு பேருந்தில் ஏறும்போது தப்பியோடினார். இதுதொடர்பாக 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து விக்கிரவாண்டி போலீசார் தப்பியோடிய நபரை ராமேஸ்வரம் அருகே கைது செய்தனர். தற்போது அதே இடத்தில் சிறுவன் தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்