சிவகாசி மாநகராட்சியோடு இணைப்பால் பிரியா விடைபெற்றது திருத்தங்கல் நகராட்சி

சிவகாசி: திருத்தங்கல் நகராட்சி, சிவகாசி நகராட்சியோடு இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக அரசாணை வெளியிட்டப்பட்டதால் 55 ஆண்டு காலம் திருத்தங்கல் நகராட்சியின் நிர்வாகம் முடிவுக்கு வந்தது.சிவகாசி நகராட்சியில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருத்தங்கல் நகரம். 108 வைணவ திவ்ய தேசங்களில் 91வது திவ்ய தேசமான நின்ற நாராயண பெருமாள் கோயில் இங்குதான் உள்ளது. கருநெல்லிநாதர் சுவாமி கோயில், நின்ற நாராயண பெருமாள் கோயில், முருகன் கோயில் ஆகியவை ஒரே மலையில் அருகருகே அமைந்துள்ளதால் சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக திருத்தங்கல் உள்ளது. இது ஒரு கோயில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த திருத்தங்கல் நகரம் 15.4.1966ல்தான் முதல்நிலை பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டது. 22.12.1981ல் தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 24.8.2004ல் மூன்றாம் நிலை நகராட்சியானது. 9.8.2010ல் முதல்நிலை நகராட்சியானது. 13 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த இந்த நகராட்சியில் சுமார் 70 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.ஆண்டு வருவாய் 12 கோடி இருக்கும் என கணக்கீடப்பட்டுள்ளது. இந்த பெருமை மிக்க திருத்தங்கல் நகராட்சி 24.10.2017ல் சிவகாசி நகராட்சியோடு இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. 24.8.2021ல் முறைப்படி சட்ட சபை கூட்டத்தொடரில் சிவகாசி மாநகராட்சி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. கடந்த அக்.22ம் தேதி சிவகாசி மாநகராட்சி உருவாக்கப்பட்டதற்கான அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்மூலம் 55 ஆண்டுகாலம் திருத்தங்கல் நகரின் உள்ளாட்சி நிர்வாகம் முடிவிற்கு வந்துள்ளது. நகராட்சியின் கடைசி தலைவராக தனலட்சுமி கணேசன், துணை தலைவராக பொன்சக்திவேல் இருந்துள்ளனர். நகராட்சியின் கடைசி ஆணையாளராக ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் முறைப்படி சிவகாசி மாநகராட்சி ஆணையர் (பொ) லலிதாமணியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். பெருமைமிக்க நகரான திருத்தங்கல் நகர் சிவகாசி நகராட்சியோடு இணைத்து மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது சோகம் கலந்த மகிழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது என முன்னாள் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்….

Related posts

43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

மன்னார்குடி அருகே கருத்தநாதபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் குடோனில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்