சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு ஆயுள் சிறை போக்சோ கோர்ட் தீர்ப்பு தண்டராம்பட்டு அருகே

திருவண்ணாமலை, நவ.18: தண்டராம்பட்டு அருேக 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கூலி தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மலைமஞ்சனூர்பதூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(52), கூலித்தொழிலாளி. திருமணமானவர். இவர் கடந்த 23.11.2021 அன்று 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியிருக்கிறார். இந்நிலையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, நடந்த கொடூரத்தை பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் தண்டராம்பட்டு போலீசில் புகார் அளித்தனர்.

அதன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ரவியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அப்போது, 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி ரவிக்கு ஆயுள் தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், 16 வயது சிறுமியிடம் மிக கொடூரமாக நடந்து கொண்டிருப்பதால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த ரவியை போலீசார் கைது செய்து பாதுகாப்புடன் அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்