சின்னாளபட்டியில் கோயில் கும்பாபிஷேகம்

 

நிலக்கோட்டை, ஜூன் 2: சின்னாளபட்டி வடக்கு தெருவிலுள்ள 50 ஆண்டு பழமையான ஸ்ரீ விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன், பட்டாளம்மன்,  பகவதி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை, முதல் கால யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கலசங்களில் வைத்து யாக சாலையில் முக்கால யாக வேள்விகள், பூஜைகள் நடந்தன. நேற்று காலை பூரணாதுதி நடந்தது. தொடர்ந்து புனித நீர் கலசங்கள் கோயில் ராஜகோபுர விமானத்திற்கு எடுத்து வரப்பட்டது.

பின்னர் சிவாச்சாரியர்கள் புனித நீரை கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது வானில் கருட பகவான் வட்டமிட பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கரகோஷம் எழுப்பினர். பின்னர் கோபுர விமானத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டு அனைத்து அம்மன்கள், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் அம்மன்கள், விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் மாயகிருஷ்ணன், உப தலைவர் வீரபாண்டி, செயலாளர் பாரதிராஜா, பொருளாளர் செந்தீபன், துணை செயலாளர் ராமன், துணை பொருளாளர் பாண்டியராசன், பாண்டி உள்ளிட்டோர் செய்திருந்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ், திமுக பேரூர் செயலாளர் மோகன், பொருளாளர் எஸ்ஆர் முருகன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் விகே முருகன், சிஐடியு மாவட்ட தலைவர் பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

வேலாயுதம்பாளையத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு