சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள சுறா துடுப்புகள் பறிமுதல்: கரூர் பயணி கைது

 

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில், இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு சுற்றுலா விசாவில் பயணம் செய்ய வந்திருந்த கரூரை சேர்ந்த சாகுல் ஹமீது (58) என்ற பயணி மீது, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால், அவருடைய உடைமைகளை முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அவர் வைத்திருந்த பைக்குள் மருத்துவ குணம் உடைய 20 கிலோ சுறா மீன்களின் துடுப்புகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து சாகுல் ஹமீதையும், அவர் வைத்திருந்த சுறா மீன்கள் துடுப்பையும், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள், சாகுல் ஹமீதின் சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்து, சுறா மீன்களின் துடுப்புகளையும் பறிமுதல் செய்தனர். அந்த சுறா மீன்கள் துடுப்புகளின் சர்வதேச மதிப்பு ரூ.10 லட்சம் என தெரிய வந்துள்ளது. மருத்துவ குணம் உடைய இந்த சுறா மீன்களின் துடுப்புகளை, வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்