சிங்கபெருமாள் கோவிலில் ஆட்டோ மோதியதில் ரயில்வேகேட் சேதம்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

 

செங்கல்பட்டு, ஏப். 7: சிங்கபெருமாள் கோவிலில் ஆட்டோ மோதியதில் ரயில்வே கேட் சேதமானது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் வழியாக திருக்கச்சூர், ஆப்பூர், ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர், தெள்ளிமேடு, வேங்கடாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால் சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட்டில் வாகன போக்குவரத்து மிகுந்து பரபரப்புடன் காணப்படும். இந்நிலையில், நேற்று மாலை ரயில் போக்குவரத்திற்காக சிங்கபெருமாள் கோவில் கேட்டை ரயில்வே ஊழியர் மூட முயன்றார்.

அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த ஆட்டோ ஒன்று ரயில்வே கேட் மீது மோதியதில், ரயில்வே கேட் சேதமடைந்தது. இதனால், ரயில்வே கேட் திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு வரிசை கட்டி நின்றது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ரயில்வே கேட் சேதமடைந்தது குறித்து பணியில் இருந்த ரயில்வே ஊழியர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் சேதமடைந்த ரயில்வே கேட்டை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு