சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து கோசாலையில் அடைப்பு: பறிமுதல் நடவடிக்கை தொடரும் என எச்சரிக்கை

 

சிவகாசி, மே 19: சிவகாசி மாநகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றி திரிந்த 18 மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து கோசாலையில் அடைத்தனர். மாடுகளை சாலையில் விடுவோர் மீது காவல் துறையில் புகார் அளித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சிவகாசி மாநகராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை வருவாய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மாநகராட்சி பகுதிகளில் மாடு வளர்ப்பவர்கள் சாலை மற்றும் பொது இடங்களில் மாடுகளை விடக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். இதனை மீறி சிலர் மாடுகளை சாலையில் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் சிவகாசி – திருத்தங்கல் சாலையில் சுற்றித்திரிந்த மாடு மீது பைக் மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக சிவகாசி மாநகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளின் உரிமையாளர்களை கண்டறியும் பணி நடைபெற்றது. இதில் சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் 65 பேர் சாலைகளில் மாடுகளை விடுவது தெரிய வந்தது. மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும், விபத்து ஏற்படும் எனத் தெரிந்தே சிலர் மாடுகளை விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில், தாசில்தார் லோகநாதன், மாநகராட்சி சுகாதார அலுவலர்(பொ) சித்திக், சுகாதார ஆய்வாளர் பாண்டியராஜன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சிவகாசி நேசனல் காலனி, திருத்தங்கல் ரோடு, ஆலமரத்து பட்டி ரோடு, சிவன்கோவில் வளாகம் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த 18 மாடுகளை பிடித்து திருநெல்வேலியில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் மாடுகள் திரிந்தால் பறிமுதல் நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related posts

அறந்தாங்கி பஸ் நிலையத்தில் குடிமகன்கள் அட்டகாசம்

பூஜை முடிவதற்குள் மின்விளக்குகள் நிறுத்தம்

பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பும் பணி தீவிரம்