சாக்கடை வடிகால் பணிக்காக ஈ.வி.கே.சம்பத் சாலையில் போக்குவரத்து மாற்றம்: 13ம் தேதி வரை அமல்

சென்னை, ஏப். 11: சாக்கடை வடிகால் பணிகள் மேற்கொள்வதால் ஈ.வி.கே. சம்பத் சாலையில் நேற்று முதல் வரும் 13ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை குடிநீர் வடிகால் வாரியம், ஈவிகே சம்பத் சாலையில் உள்ள நாராயண குரு சாலை சந்திப்பு முதல் ஜெர்மியா சாலை சந்திப்பு வரையில் சாக்கடை வடிகால் பணியை மேற்கொள்ள இருப்பதால் நேற்று முதல் வரும் 13ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள ஹண்டர்ஸ் சாலை நாராயணகுரு சாலை சந்திப்பிலிருந்து ஈவிகே சம்பத் சாலை ஜெர்மியா சாலை சந்திப்பு வரையிலும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. ஹண்டர்ஸ் சாலையில் டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் ஜெனரல் காலின்ஸ் சாலை, மெடெக்ஸ் சாலை மற்றும் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகத் தங்கள் இலக்கை அடையலாம். ஹண்டர்ஸ் சாலையில், டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் எம்டிசி பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, சூளை நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை மற்றும் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் சென்று அவர்கள் இலக்கை அடையலாம். எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு

திருச்சி அருகே விபத்து கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்

காயங்களுடன் பெண் மீட்பு