சடலத்தை சுடுகாட்டில் புதைக்கவிடாமல் தடுத்த அமமுக ஊராட்சி தலைவர்

பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்டது பானவேடுதோட்டம் ஊராட்சி. இந்த பகுதியில் உள்ள தனியார் வீட்டு மனைப்பிரிவில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வந்த முத்துசாமி (84), என்ற முதியவர் உடல் நலக்குறைவால் நேற்றுமுன் தினம் இரவு இறந்தார். அவரது உடலை உறவினர்கள் பானவேடுதோட்டம் சமத்துவ சுடுகாட்டில் கிறிஸ்துவ முறைப்படி புதைக்க ஏற்பாடு செய்தனர். அப்போது அங்கு வந்த பானவேடுதோட்டம் ஊராட்சி தலைவரும், அமமுக பூந்தமல்லி ஒன்றிய செயலாளருமான சிவசங்கர், இறந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு குழி எடுக்க வந்த பொக்லைன் இயந்திரத்தை தடுத்துநிறுத்தினார். இதனால் அந்த முதியவரின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் மற்றும் வருவாய்துறையினரிடம் புகாரளித்தனர். புகாரை அடுத்து  பூந்தமல்லி தாசில்தார் சங்கர், பூந்தமல்லி  வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஊராட்சி தலைவர் சிவசங்கர் அரசு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறந்த முதியவரின் உடலை காலை 10 மணிக்கு அடக்கம் செய்ய இருந்த நிலையில் ஊராட்சி தலைவர் தடுத்ததால் மதியம் 1 மணி வரை இறந்தவரின் உடலை வீட்டிலேயே வைத்து செய்வது அறியாமல் தவித்தனர். பின்னர் அதிகாரிகள் இதுகுறித்து வெள்ளிக்கிழமை அனைவரையும் அழைத்து தாசில்தார் தலைமையில் கூட்டம் நடத்தி உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து உடலை புதைக்க ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்கு வசிக்கும் மக்களும் ஊராட்சிக்கு தொடர்ந்து வீட்டுவரி உள்ளிட்ட அனைத்தும் செலுத்தி வருகிறோம். ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் செய்துதருவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. வீட்டு வரி, வீட்டு அங்கீகாரம் பெறுவதில் கடும் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர்….

Related posts

மணலி மண்டலம் 16வது வார்டில் பழுதடைந்த தெருவிளக்குகளால் இருளில் மூழ்கும் சாலைகள்: சீரமைக்க கோரிக்கை

வாடிக்கையாளர் போல் நடித்து நகை கடையில் திருடிய பெண் கைது

பணம் திருடியவர்களை பிடிக்க முயன்றதால் நடைபாதையில் தூங்கிய வாலிபர் மீது ஆசிட் வீச்சு: தப்பிய 4 பேருக்கு வலை