கோவிந்தா.. கோவிந்தா கோஷத்துடன் லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டம்

கடலூர், மே 5: சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கடலூர் அருகே உள்ள சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோயிலின், சித்திரை பிரமோற்சவ திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் சுவாமிக்கு, சிறப்பு பூஜைகளும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில், வீதி உலாவும் நடைபெற்று வந்தது. கடந்த 29ம் தேதி கருடசேவை நடைபெற்றது. பிரமோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதற்காக கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில், தேவி பூதேவி சமேத, லட்சுமி நரசிம்மர் தேரில் எழுந்தருளினார். பின்னர் அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், கோவிந்தா.. கோவிந்தா என்ற கோஷத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்