கொரோனா தொற்று பரவல் குறைவதால் கடைவீதிகளில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்-விழிப்புணர்வு இல்லாததால் விபரீதம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா பரவல் படிப்படியாக குறைவதால், கடைவீதிகளில் குவியும் கூட்டம் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமான பாதிப்பையும், உயிர் இழப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாவது அலை தொடங்கிய ஏப்ரல் 1ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 19,850ஆக இருந்தது. தற்போது, 50,788ஆக அதிகரித்துள்ளது.அதன்படி, கடந்த மூன்றரை மாதத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது அலை உச்சம் தொட்டபோது, நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். தளர்வில்லாத ஊரடங்கு, போக்குவரத்து முடக்கம், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல், பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு, தடுப்பூசி போன்ற தொடர் நடவடிக்கையால் படிப்படியாக தொற்றுப் பரவல் குறைய தொடங்கி இருக்கிறது. தற்போது, நாள் ஒன்றுக்கு சராசரியாக 75 பேர் தொற்று பாதிக்கப்படுவது கண்டறியப்படுகிறது. ஆனாலும், இன்னும் கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. தினசரி உயிரிழப்பும் ஏற்படுகிறது.ஆனாலும், பொதுமக்களிடம் அச்சம் நீங்கி, விழிப்புணர்வு குறைந்துள்ளது. எனவே, கடை வீதிகளிலும், பொது இடங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.திருவண்ணாமலையில் பெரிய தெரு, சன்னதி தெரு, தேரடி வீதி, கடலைக்கடை சந்திப்பு, திருமஞ்சன வீதி உள்ளிட்ட பகுதிகளில் திருவிழாபோல் கட்டுக்கடங்காத கூட்டம் நடமாடுகிறது. கடைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் மக்கள் குவிகின்றனர்.இதனால், திருவண்ணாமலை நகரின் முக்கிய கடைவீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் காணப்படுகிறது. இரண்டாம் அலையின் தீவிரம் முற்றிலுமாக குறையாத நிலையில், விழிப்புணர்வும் தனிநபர் கட்டுப்பாடுகளும் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வருவது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.எனவே, கடைவீதிகள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கூடுதலான நபர்களை அனுமதிக்கும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.விதிமீறல்களை தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டுமே, திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்….

Related posts

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை