கைலாசநாதர் கோயில் அருகே இரண்டாக பிளந்து சாய்ந்த அரசமரம்: உயிர்ச்சேதம் தவிர்ப்பு

 

காஞ்சிபுரம், ஆக. 28: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் அருகே பழமையான அரசமரம் இரண்டாகப் பிளந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு பகுதியில் கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகம் அருகே நூற்றாண்டு பழமையான அரசமரம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் வானிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து காஞ்சிபுரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மேலே குறிப்பிட்ட அரசமரத்தின் ஒரு பகுதி பிளந்து அருகில் இருந்த வெங்கடேசன் என்பவரது வீட்டின் மேற்கூரை மீது சாய்ந்தது.

உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் வெளியேறினர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். இதுகுறித்து காஞ்சிபுரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர் மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரம் அறுக்கும் இயந்திரத்தின் பிளேடுகள் பொருந்தாத காரணத்தால் அகற்ற முடியாததையடுத்து, தொடர்ந்து கத்திகளைக் கொண்டு மரக்கிளைகளை அகற்றினர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்வாரிய ஊழியர்களால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்