குளத்தில் முள்செடிகள் அகற்றம்

 

ஏரல், செப்.11:சாயர்புரம் அருகே பேய்க்குளம் குளம் 312 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தை நம்பி 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை என விவசாயம் நடந்து வருகிறது. இந்த குளத்திற்கு தாமிரபரணி ஆற்றில் வைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள வடகால் வாய்க்கால் மூலம் தண்ணீர் வந்து பெருகும். பாபநாசம் அணைக்கட்டில் தண்ணீர் இல்லாததினால் வைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆவதால் பேய்க்குளம் குளம் தண்ணீரின்றி வறண்டு போய் உள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் பகுதி வாழைகளை காப்பாற்றிட பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து சொட்டு பாசனம் அமைத்து ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர்.

இந்நிலையில் குளத்தில் முள்செடிகள் மற்றும் காட்டுச்செடிகள் தளிர்விட்டு ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து மழைக்காலத்தில் குளத்திற்கு தண்ணீர் வரும் போது இந்த முள்செடிகளால் தண்ணீர் வருவதற்கு தடையாக இருக்கும் என்பதையடுத்து இங்குள்ள பேய்க்குளம் நிலச்சுவன்தார்கள், விவசாயிகள் அபிவிருத்தி சங்கம் சார்பில் குளத்தில் பெரும்படைசாஸ்தான் கோயில் அருகில் இருந்து 6ம் நம்பர் மடை வரை சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் முள்செடி மற்றும் செடிகளை வேலை ஆட்கள் மூலமாகவும், ஜேசிபி மூலமும் அப்புறப்படுத்தினர். விவசாய சங்கத்தினரின் இந்த சேவையை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு