கிரானைட் கடை உரிமையாளர் குடும்பத்தினரை தாக்கிய கும்பல் போளூரில் பரபரப்பு முகமூடி அணிந்து இரவில் வீடு புகுந்தனர்

போளூர், டிச.3: போளூரில் முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் இரவில் வீடு புகுந்து கிரானைட் கடை உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரை சரமாரி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் சக்திவேல்(33). திருவண்ணாமலை செல்லும் வசூர் கூட்ரோடு அருகே கிரானைட் கடை நடத்தி வருகிறார். கடைக்கு பின்னால் அவரது வீடு உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சக்திவேல் பெற்றோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து சக்திவேல் மற்றும் அவரது தந்தை, தாய் வள்ளியம்மாள் ஆகியோரை கத்தி, கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். வலி தாங்க முடியாமல் 3 பேரும் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

தொடர்ந்து, 3 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சக்திவேல் நேற்று போளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார். முகமூடி கும்பல் வீடு புகுந்து கிரானைட் கடை உரிமையாளர் குடும்பத்தினரை சரமாரி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு