கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி காத்திருந்து தரிசனம்: பர்வத மலையில் பக்தர்கள் திரண்டனர்; மகா தீபத்தை இன்றுவரை தரிசிக்கலாம்

கலசபாக்கம்: கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு பர்வதமலையில் திரளான பக்தர்கள் காத்திருந்து பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பர்வத ராஜ மன்னனுக்கு மகளாக அவதரித்த பார்வதி தேவி ஈசனின் உடலில் இடப்பக்கம் வேண்டி காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த போது இம்மலையின் அடிவாரத்தில் பச்சையம்மன் ஆக தவமிருந்து இறைவனை வணங்கினார். எனவே இது பர்வத மலை என அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் இறைவனுக்கு பக்தர்களே அபிஷேகம் செய்வது போல இங்கு நாமே அபிஷேக ஆராதனைகள் செய்யலாம். இத்தகைய சிறப்புமிக்க பர்வதமலையில் நேற்று முன் தினம் மகா தீபத்தை முன்னிட்டு பெருந்திரளாக தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு அர்ஜூனேஸ்வரர், பாலாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் மலையேறி சென்று மல்லிகா அர்ஜுனேஸ்வரர், பாலாம்பிகை அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கோயில் மாதி மங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கரை கண்டீஸ்வரர் கோயிலில் வழிபட்டு கடலாடி பட்டியந்தல் வேடப்புலி வெள்ளந்தாங்கிஸ்வரர் வட காளியம்மன் கோயில் வழியாக சுமார் 23 கிலோமீட்டர் கிரிவலம் வந்தனர். செங்குத்தான கட பாறை படி ஏறும்போது அரோகரா அரோகரா என பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது. புதன்கிழமை கிரிவலம் வந்தால் இறைவனின் முழு கருணை கிடைக்கும் என்பது ஐதீகம். தொடர்ந்து இரண்டு நாட்களாக பர்வதமலை பக்தர்களின் வெள்ளத்தில் மூழ்கியது. மகா தீபம் நேற்று முன்தினம் ஏற்றப்பட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் காட்சி தரும். அதன்படி இன்று (8ம் தேதி) வரை பக்தர்கள் தரிசிக்கலாம். அதையொட்டி இன்று வரை மகா தீபத்தை காண பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். நாளை காலை மலை மீது இருந்து மெகா கொப்பரை கீழே இறக்கப்பட உள்ளது.இருளில் மூழ்கிய விளக்குகள் ஜொலித்ததுபக்தர்களின் வசதிக்காக பச்சையம்மன் கோயில் முதல் வீரபத்திரன் கோயில் வரை திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, அப்போதைய கலெக்டர் ராஜேந்திரன் முயற்சியால் 53 மின்விளக்குகள் அதிரடியாக பொருத்தப்பட்டது. கடந்த 10 ஆண்டு காலமாக முழுமையாக பராமரிக்கப்படாததால் இப்பாதை இருளில் மூழ்கியது. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டனர். மகாதீபம் காண வரும் பக்தர்களின் வசதிக்காக மின்விளக்குகளை சரி செய்து தர வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் எம்எல்ஏ பெ.சு.தி. சரவணனிடம் வலியுறுத்தினர். அதன் பயனாக தற்போது, பாதுகாப்பு வளையத்துடன் உடனடியாக 40 மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

பாஜ ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கேள்விகுறிதான்: திருமாவளவன் பேட்டி