காரிமங்கலத்திற்குள் வராமல் புறக்கணிக்கும் பேருந்துகள்-பொதுமக்கள் திண்டாட்டம்

காரிமங்கலம் : காரிமங்கலம் நகருக்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வராமல் பைபாஸ் சாலையிலேயே சென்று விடுவதால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் அமைந்துள்ள காரிமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர், நாள் தோறும் பணி நிமித்தம் வெளியூருக்கு சென்று வருகின்றனர்.  மேலும், காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிகளவில் விளைவிக்கப்படும் பல்வேறு பூ வகைகள், காய்கறிகள் போன்றவை வெளியூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த காரிமங்கலம் வழியாக பேருந்துகள் செல்ல அரசு சார்பில் பெர்மிட் வழங்கப்பட்டும், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், காரிமங்கலம் பைபாஸ் சாலையிலேயே மின்னல் வேகத்தில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. குறிப்பாக ஓசூர், பெங்களூரூ, சேலம் மற்றும் சென்னை ஆகிய ஊர்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் காரிமங்கலத்திற்குள் வருவதே இல்லை. இதேபோல், பல தனியார் பேருந்துகளும் காரிமங்கலம் நகருக்குள் வருவதில்லை. இதனால், வெளியூருக்கு சென்ற பொதுமக்கள், காரிமங்கலத்துக்கு வரமுடியாமல் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நடத்துனர்களிடம் கெஞ்சி கூத்தாடி பஸ்சில் ஏறினாலும், அகரம் பிரிவு சாலையில் இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் நீண்ட தூரம் நடக்க வேண்டிய அவலம் தொடர்கிறது. எனவே, அனைத்து பேருந்துகளும் காரிமங்கலம் நகருக்குள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

‘போலீஸ் ஸ்டிக்கர்’ ஒட்டிய போலீஸ் வாகனங்களுக்கும் ரூ.500 அபராதம் விதிப்பு: வேப்பேரி போக்குவரத்து போலீஸ் அதிரடி