காட்டுப்பன்றிகளால் நெற்பயிர் சேதம்

உடுமலை, ஏப்.5: நெல் வயல்களில் உருண்டு புரளும் காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றுப் பாசனத்தில் சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, பெரும்பள்ளம் ஆகிய பாசன பிரிவுகள் உள்ளன.இப்பகுதியில் விவசாயிகள் சுமார் 35 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்கின்றனர். கடத்தூர் பகுதியில் சுமார் 1650 ஏக்கரில் பாசனம் நடக்கிறது. இதில் 800 ஏக்கர் அளவுக்கு விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.தற்போது, நெல் மணிகள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், காட்டுப் பன்றிகள் வயலில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கடத்தூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவு செய்து நெல் பயிரிட்டுள்ளோம். அறுவடையின்போது, ஏக்கருக்கு தலா 60 கிலோ கொண்ட 120 மூட்டை நெல் கிடைக்கும். தற்போது அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் உள்ளன.இந்நிலையில், காட்டுப் பன்றிகள் படையெடுத்து வந்து, வயலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. கூட்டம் கூட்டமாக நெற்பயிர்களின் மேல் படுத்து உருள்வதால், பயிர்கள் சாய்ந்து அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதுபற்றி அமராவதி வனச்சரக அதிகாரிகளிடம் தெரிவித்தும் காட்டுப் பன்றிகளை விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல், நிலக்கடலை தோட்டத்திலும் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு