காடுகளில் தொட்டி கட்டி வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி-சோலார் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு, தொப்பூர் கணவாய், மஞ்சவாடி கணவாய், மூக்கனூர் மலை, கோட்டப்பட்டி, மொரப்பூர், செம்மனஅள்ளி வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குரங்கு, மான், முயல் போன்றவை அதிகளவிலும், யானை, செந்நாய், காட்டெருமை, சிறுத்தை குறைந்த அளவிலும் இருக்கின்றன. கடந்த சிலநாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நீர்நிலைகளை குறிவைத்து நகர்வது அதிகரித்துள்ளது.ஆனால், கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் வனத்தில் இயற்கையாக அமைந்துள்ள குளம்- குட்டைகள் வற்றிவிட்டன. கொளுத்தும் வெயிலால் புதருக்குள் ஓய்வெடுக்கும் விலங்குகள், மாலை நேரங்களில் தண்ணீரை தேடி அடர்ந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியில் நடமாடுகின்றன. சிறிய அளவிலான குட்டை, தடுப்பணை நீரின் உதவியால் விலங்குகளுக்கு தண்ணீர் பிரச்னை ஓரளவு தீர்ந்துள்ளது. ஆனால், வனத்தில் மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து, பச்சை இழந்து நிற்கின்றன. அனல் கக்கும் வெயிலின் கொடுமையால் காட்டில் இருக்கும் மரங்கள் காய்ந்து விட்டன. விலங்குகள் உணவாக எடுத்து கொள்ளும் காட்டு மா, அத்திமரம், விளாமரம் ஆகியவைகளில் இலைகள் ஜருகுகளாகி விட்டன. இதனால், வன விலங்குகளுக்கு குடிக்க தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.காட்டில் உணவு கிடைக்காமல் வெளியே வரும் குரங்குகள், சாலையில் செல்லும் லாரி, பஸ், கார்களில் இருந்து வீசப்படும் உணவுகளை எடுத்து சாப்பிட்டு சாலையோரத்தில் நிற்கின்றன. மேலும், வீசப்படும் தண்ணீர் பாட்டில்களையும் எடுத்து அதில் எஞ்சியிருக்கும் தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் குடிக்கின்றன. வனத்தில் நிலவும் வறட்சியின் காரணமாக விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக வனத்தை விட்டு வெளியே வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதிலும், குரங்கினங்கள் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. பசியால் நெடுஞ்சாலையில் குரங்குகள் சுற்றித்திரிவது அதிகரித்துள்ளது. குரங்குகளின் பசியை போக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே உள்ள தண்ணீர் தொட்டிகளில் குரங்களுக்கு தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தொப்பூர் கணவாயில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு குரங்குகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக சாலையோரத்தில் காத்திருக்கின்றன. பஸ் பயணிகள், லாரி டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் தூக்கி வீசும் உணவு பண்டங்களை எடுப்பதற்காக குரங்குகளிடையே போட்டி காணப்படுகிறது. இதனால், சில நேரங்களில் வாகனங்களில் அடிப்பட்டு குரங்குகள் உயிரிழக்கின்றன. பசியால் வாடும் குரங்குகளை நிரந்தரமாக காட்டுக்குள் செல்லும் வகையில் பழவகையான மரச்செடிகள் வனத்துறையினர் வைக்க வேண்டும். இதுபோல் செம்மனஅள்ளி வனப்பகுதியிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றனர்.இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் கேவி அப்பல்ல நாயுடுவிடம் கேட்டபோது அவர் கூறுகையில், நெடுஞ்சாலையோரத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் தாக சாந்திக்காக தொட்டி அமைத்து சோலார் மூலம் தண்ணீர் நிரப்பி வைக்கப்படுகிறது. வனவிலங்கு சட்டப்படி சாலையோரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கக்கூடாது. பழக்கப்பட்ட குரங்குகள் சாலையோரத்தில் நிற்பதால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் போடும் உணவுகளை சாப்பிட்டு அங்கேயே வலம் வருகின்றன. ஆனால், வனப்பகுதியில் வன விலங்களுக்காக தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்படுகிறது என்றார். …

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!