காஞ்சி மாநகராட்சியில் பரபரப்பு முதல் மாமன்ற கூட்டத்தில் இருந்து துணை மேயர் வெளிநடப்பு: பரபரப்பு குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டத்தில் இருந்து துணை மேயர் வெளி நடப்பு செய்தார். தொடர்ந்து, சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம், மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதல் முறையாக பெண்களுக்கு அதிக இடமளித்து பெண்ணுரிமையை நிலை நாட்டியதற்கு  நன்றி தெரிவித்தல் , தீண்டாமை ஒழிப்பு  உறுதிமொழி, பிளாஸ்டிக் இல்லாத காஞ்சியை உருவாக்குதல், தமிழக அரசு உத்தரவின்படி சொத்து வரி உயர்வு உள்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதற்கிடையில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, திமுக உறுப்பினர்கள் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. அப்போது, மாநகராட்சி துணை மேயரான காங்கிரஸ் உறுப்பினர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையாளர் நாராயணனிடம், மாநகராட்சி நிர்வாகம் முறையாக அரசு விதிகளை கடைபிடிக்கவில்லை என கூறி மாமன்றத்தில் கடும் குற்றம் சாட்டினார். இதையொட்டி, துணை மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் துணை மேயர், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியே சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேலும் கவுன்சிலர்கள் சந்துரு, சுரேஷ், த.விஸ்வநாதன் ஆகியோர் சொத்து வரி உயர்வு என்பது அதிமுக ஆட்சியின் போதே முடிவு செய்யப்பட்டது. தேர்தலுக்காக அவர்கள் அதை அமல்படுத்தாமல் சென்றுவிட்டனர். எனவே சொத்து வரி உயர்வு என்பது அதிமுக உயர்த்தியது தான். நாங்கள் இப்போது உயர்த்தவில்லை என கூறினார்கள். எதையும் பொருட்படுத்தாமல் அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் வெளிநடப்பு செய்தனர். பின்னர், துணை மேயர் குமரகுருநாதன், செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வர் கூட்டணி கட்சிகளுக்கு தகுந்த மரியாதை அளித்து வருகிறார். ஆனால் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயராகிய என்னிடம் இக்கூட்டம் குறித்து எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை. தாம்பரம் மாநகராட்சியில் மேயர், துணை மேயர், ஆணையாளருக்கு 3 இருக்கை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். அதை போல காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டரங்கில் துணை மேயருக்கான இருக்கை ஒதுக்கி தர வேண்டும். வசதிகளிலும் பாரபட்சமாக செயல்பட்டு துணை மேயருக்கான உரிய மரியாதையும், உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தில் 3 மாமன்ற உறுப்பினர்களின் தலையீடுகளே உள்ளது. அவர்களிடம் தான் ஆலோசனைகள் பெற்று அனைத்தும் நடக்கிறது என்றார்….

Related posts

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை