காஞ்சிபுரத்தில் ரூ.75 லட்சத்தில் சம்மந்தமூர்த்தி நகர் பூங்கா சீரமைப்பு: பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், ரூ.75 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட சம்மந்தமூர்த்தி நகர் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரத்தில், 43வது வார்டு பகுதியில் அதியமான் நகர், சம்மந்தமூர்த்தி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மாநகராட்சி சார்பில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் 2021-22ன் கீழ், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் சம்மந்தமூர்த்தி நகர் பூங்கா சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கான சறுக்கு மரம், ஊஞ்சல், நடைபயிற்சி மேற்கொள்ள பாதை, புல்தரை, யோகாசன பயிற்சி கூடம், கழிவறை என அனைத்து வசதிகளுடன் பூங்கா கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் முடிவடைந்தது. இந்நிலையில், சுமார் 5 மாதங்களுக்கு மேலாகியும் பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பூங்காவில் நடைபாதையில் செடிகள் முளைத்துள்ளன. மேலும், பூங்காவில் உள்ள குப்பை தொட்டி மற்றும் சில பிளாஸ்டிக்கால் ஆன அழகு பொருட்கள் சேதமடைந்து வருகின்றன. எனவே, மாநகராட்சி சார்பில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சம்மந்தமூர்த்தி நகர் பூங்காவை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது