கர்நாடகாவில் நடக்கும் பன்னாட்டு கலாச்சார போட்டிக்கு அரசு பள்ளி மாணவிகள் தேர்வு; சாரண அமைப்பிலும் வெற்றிகளை குவித்தவர்கள்

வல்லம்: கர்நாடக மாநிலத்தில் நடக்கும் பாரத சாரண, சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாச்சார பெருத்திரளணி விழாவில் மாவட்ட அளவில் தஞ்சாவூர் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த சாரணிய மாணவிகள் 9 பேர் தேர்வாகி பங்கு கொள்கின்றனர். நம்பிக்கை என்ற சாம்ராஜ்யத்தில் வெற்றி என்ற பாதையில் திறமையை சொத்தாக கொண்டு கோலாட்டம், ஒயிலாட்டம், கும்மி போன்ற கலைகளில் விருதும், சான்றிதழும் பெற்று மற்ற பள்ளிகளை மலைக்க வைத்து வருகின்றனர் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி மாணவிகள். மாவட்ட அளவிலான பல்வேறு கலை விழாக்களில் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தி சாதனை சுடராக ஒளிவீசுகின்றனர். இவர்கள் சாரண அமைப்பிலும் தங்கள் திறமைகளை காண்பித்து வெற்றிகளை குவித்து வருகின்றனர்.அந்த வகையில் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடம் மாவட்டம் மூடுபிரியில் உள்ள ஆழ்வா இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை பாரத சாரண சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாச்சார பெருந்திரளணி விழா நடக்கிறது. இதில் 18 நாடுகளை சேர்ந்த சாரண, சாரணிய மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். பிரமாண்டமாக நடக்கும் இவ்விழாவில் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தின் சார்பில் மனோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த சாரணிய மாணவிகள் பத்தாம் வகுப்பை சேர்ந்த வைஷ்ணவி, ராகவி, லோகேஸ்வரி, 9ம் வகுப்பை சேர்ந்த ஜெயஸ்ரீ, யுவஸ்ரீ, எழிலரசி, ஹர்ஷினிசரோ, நேத்ரா, சுஜா ஆகிய 9 பேர் பங்கு கொள்கின்றனர்.விழாவில் இம்மாணவிகள் கோலாட்டம் மற்றும் கும்மியாட்டம் ஆகியவற்றில் பங்கு கொள்வதற்காக தேர்வாகியுள்ளனர். இதற்காக மாணவிகளுக்கு இப்பள்ளி முன்னாள் மாணவி சண்முகி நடனப் பயிற்சி அளித்து வருகிறார். இம்மாணவிகள் சாரணிய ஆசிரியை இந்துமதி தலைமையில் கர்நாடகாவிற்கு செல்கின்றனர். இவர்களுடன் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை உயர்நிலைப்பள்ளி சாரண ஆசிரியர் சிராஜுதீனும் செல்கிறார். இவர்களை சாரண இயக்க மாவட்ட செயலாளரும், பள்ளி தலைமை ஆசிரியருமான சந்திரமௌலி ஒருங்கிணைத்து அழைத்துச் செல்கிறார். இப்பள்ளி மாணவிகளை தமிழ்நாடு பாரத சாரண, சாரணிய இயக்க தஞ்சாவூர் மாவட்ட முதன்மை ஆணையர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருமான சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலரும், மாவட்ட சாரண ஆணையருமான கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் இப்பள்ளி மாணவிகள் மட்டும் தேர்வு பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட மாணவிகள் 9 பேரும் இதற்கு முன்பாக மாவட்ட அளவில் நடந்த பல்வேறு கலை விழாக்களில் பங்கேற்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளனர். பெரிய கோயிலில் நடந்த கலை விழா, தென்னக பண்பாட்டு மையத்தில் நடந்த விழா அரண்மனை வளாகத்தில் நடந்த புத்தகத் திருவிழா ஆகியவற்றில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று கோலாட்டம், ஒயிலாட்டம் கரகம் போன்றவற்றில் பரிசுகளும் வென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது….

Related posts

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு: 150 பசுக்கள் மீட்பு; ம.பி போலீஸ் நடவடிக்கை

காரில் கடத்திய ₹2 கோடி தங்கம் 1 கிலோ வெள்ளி நகை பறிமுதல்