ஏரியில் மீன் குஞ்சுகளை விட அனுமதிக்க கோரி சாலையில் மீன்களை கொட்டி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்-தண்டராம்பட்டில் பரபரப்பு

தண்டராம்பட்டு : தண்டராம்பட்டில் ஏரியில் மீன் குஞ்சுகளை விட அனுமதிக்க கோரி சாலையில் மீன்களை கொட்டி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் ஊராட்சியில் 205 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஹரிஹரன் தலைமையில் மீன் வளர்ப்பு குத்தகை ஏலம் விடப்பட்டது. இந்த ஏலம் ராதாபுரம் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் ஏலம் எடுத்துள்ளார். பின்னர், ஏரியில் மீன் வளர்க்க குஞ்சுகளை விட சென்றபோது கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் கந்தசாமி மீன் குஞ்சுகளை ஏரியில் விட சென்றபோது அப்பகுதிமக்கள் இது பொதுமக்களுக்கு உண்டான ஏரி. நீங்கள் மீன்குஞ்சுகளை விடக்கூடாது. அனைத்து சமூகத்தை சார்ந்தவர்கள் முன்வைத்து ஏரி ஏலம் விட வேண்டும். அதன் பின்னரே மீன்குஞ்சுகளை ஏரியில் விடவேண்டும் என்று கூறி வண்டியை மறித்தனர். பின்னர், ஏரி ஏலம் எடுத்த மீனவர்கள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் நாங்கள் ஏலம் எடுத்து அதற்குண்டான பணத்தை பொதுப்பணித்துறையிடம் செலுத்தியுள்ளோம். எங்களை ஏரியில் மீன் குஞ்சு விட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு ராதாபுரம் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, விஏஓ சிவலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் அலமேலுகுமார் அகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் மாலை 5 மணியளவில் சமாதான கூட்டம் நடைபெறும். இருதரப்பினரும் வரவேண்டும் என்று கூறினர். தொடர்ந்து, மறியலை கைவிட்டு சென்றனர். பின்னர், இருதரப்பினரும் சமாதான கூட்டம் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அடுத்த சமாதான கூட்டம்  திருவண்ணாமலை ஆர்டிஓ தலைமையில் நடைபெறும் என்று தாசில்தார் கூறினார். பின்னர்,  இருதரப்பினரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கேரளாவிலும் மீன்பிடி தடைகாலம் சென்னைக்கு மீன்கள் வரத்து குறைந்தது: விலை அதிகரிப்பால் மீன்பிரியர்கள் ஏமாற்றம்

திருத்தணி முருகன் கோயிலில் ஆந்திர அமைச்சர் ரோஜா சாமி தரிசனம்