உதவி பேராசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி அம்பேத்கர் கலை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: போலீசார் சமரசம்

பெரம்பூர், ஆக.11: உதவி பேராசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி, அம்பேத்கர் கலை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வியாசர்பாடியில் அம்பேத்கர் அரசினர் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு தாவரவியல் மற்றும் தாவர உயிர் தொழில்நுட்பவியல் துறை பேராசிரியராக பாலாஜி பணிபுரிந்து வருகிறார். இதே துறையில் புதிதாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து அயல் பணிக்காக முனைவர் ரவி மைசின் என்பவரும் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் பாலாஜி மற்றும் ரவி மைசின் ஆகியோர் இடையே துறையில் யார் பெரியவர் என்ற ரீதியில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி பாலாஜி கல்லூரி முதல்வரிடம் ரவி மைசின் மீது புகார் அளித்தார். இதுகுறித்து அந்த துறையின் கவுரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த கலைகந்தன் (37) என்பவரிடம் கல்லூரி முதல்வர் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது கலைகந்தன், ரவி மைசினுக்கு எதிராக முதல்வரிடம் கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ரவி மைசனுக்கும், கலைகந்தனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச் சலுக்கு ஆளான கலைகந்தன் கடந்த 2ம் தேதி கல்லூரி முதல்வரிடம் புகார் மனு கொடுத்துவிட்டு அவரின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் கீழ்பாதி பகுதியில் உள்ள கிராமத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி அவரது சொந்த ஊரில் கலைக்கந்தன் மாரடைப்பால் இறந்துவிட்டார். கலைகந்தனின் சாவிற்கு ரவி மைசின் கொடுத்த தொல்லை தான் காரணம் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தாவரவியல் துறை மாணவ மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து நேற்று காலை கல்லூரி வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ரவி மைசினை வேறு கல்லூரிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். தகவலறிந்த எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கல்லூரி நிர்வாகம் சார்பிலும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை முடிவில் சம்பந்தப்பட்ட பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாணவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்