ஆவடி மாநகராட்சியில் கடந்த ஏப்ரலில் மட்டும் ₹259 லட்சம் சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ₹71 லட்சம் அதிகம்

ஆவடி, மே 12: ஆவடி மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 7,757 சொத்து வரி உரிமையாளர்களிடமிருந்து ₹259 லட்சம் சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ₹71 லட்சம் அதிகம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. திருமுல்லைவாயல், கோவில்பதாகை, மிட்டனமல்லி, பட்டாபிராம், பருத்திப்பட்டு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் இந்த மாநகராட்சிக்கு உட்பட்டு அமைந்துள்ளன. மொத்தம் 3.46 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மாநகராட்சியின் வரி வருவாயில் சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்டவை முக்கிய பங்கு வசிக்கிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகள், வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், பலர் முறையாக சொத்து வரி செலுத்தாததால் மாநகராட்சிக்கு வருவாய் பாதித்து, வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி மாநகராட்சி முடிவு செய்தது.

பொது சுகாதாரப் பிரிவு கணக்கெடுப்பின்படி, ஆவடி மாநகராட்சியில் 1 லட்சத்து 19 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. ஆனால் மின் வாரியத்தின் வாயிலாக பெறப்பட்ட மின் இணைப்புகள் மட்டும் 1 லட்சத்து 75 இருந்தன. இந்த முரண்பாடுகள் வாயிலாக, புதிதாக வரிகள் விதிக்க வேண்டிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதை அறிந்து கொள்ளும் பொருட்டு, முழுமையான மற்றும் விரிவான கள ஆய்வுகள் மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் தீர்மானித்தனர்.

இந்த கள ஆய்வுகளை, மாநகராட்சி அலுவலர்களால் மேற்கொள்ள இயலாது என்பதால், தனியார் நிறுவனத்தின் உதவியை நாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி முரண்பாடுகளை ஆராய, ‘பைலட் சர்வே’ என்ற பெயரில், கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக 7 வார்டுகளில் நேரடி கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் வாயிலாக 3,500 புதிய வரி விதிப்பு இனங்கள் கண்டறியப்பட்டன. இந்த புதிய வரி விதிப்பு இனங்கள் வாயிலாக ஆண்டுக்கு, ₹1.24 கோடி சொத்து வரியாக மாநகராட்சிக்கு கிடைக்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த கள ஆய்வு மீதமுள்ள வார்டுகளிலும் மேற்கொள்ள மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒரு வார்டு தேர்வு செய்து, அதன் எல்லைகள் கண்டறிந்து, ஜி.பி.எஸ்., மற்றும் ட்ரோன் கேமரா வாயிலாக 200 மி.மீ., அளவுக்கு மையப் புள்ளிகள் ஏற்படுத்தி குடியிருப்பு மற்றும் இதர பகுதிகள் கண்டறியப்பட்டன.

அதன்பின், மாநகராட்சி வரி விதிப்பு தகவல், ஜி.பி.எஸ்., வாயிலாக பெறப்பட்ட தகவல், இணைத்து புதிய வரி இனம் கண்டுபிடிக்கப்பட்டது. அதை உறுதிப்படுத்த, வீடு வீடாக சென்று நேரடி ஆய்வு வாயிலாக, விடுபட்ட இனங்கள் திருத்தி அமைக்கப்பட்டது. பின்னர் அவை கணினியில் தரவிறக்கம் செய்து, வரி விதிக்கப்படாத இனங்களுக்கு, சம்பந்தப்பட்ட வருவாய் துறை வாயிலாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஆவடி மாநகராட்சியில் சொத்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 83,575 ஆக உள்ளது. இந்நிலையில், 2023-24ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை 30.04.2023ம் தேதிக்குள் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால், 5 சதவீதம் ஊக்க தொகை பெறலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

ஆனாலும், ஏராளமானோர் சொத்து வரி செலுத்தவில்லை. இதனால், சொத்து வரியை செலுத்தாதவர்களின் வசதிக்காக, முதல் அரையாண்டுக்கான காலக்கெடு ஏப்ரல் 15ம் தேதி வரை என்பதை 15 நாட்கள் நீட்டித்து, ஏப்ரல் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், ஏப்ரல் 30ம் தேதி வரை வரி செலுத்துபவர்களுக்கும் ₹5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது. இதன் மூலம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 7,757 சொத்து வரி உரிமையாளர்களிடமிருந்து ₹259 லட்சம் சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ₹71 லட்சம் அதிகம். மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டியவர்கள் தங்களது சொத்து வரியினை உடனடியாக செலுத்தி மாநகராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்தி நடவடிக்கை
ஆவடி மாநகராட்சியில் அதிக சொத்து வரி நிலுவையில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி வரி செலுத்தாதவர்களின் கட்டிடங்களுக்கு சீல் வைக்கவும், தொடர்ந்து மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி ஜப்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தி, நீண்ட காலமாக வரி பாக்கி வைத்துள்ள கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘க்யூ ஆர்’ கோடு வசதி
சொத்து வரியை எளிய முறையில் வசூல் செய்ய ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து வரி செலுத்தும் வீடுகளுக்கு ‘க்யூ ஆர்’ கோடு என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டிராய்டு போன் மூலம் இந்த அட்டையை ஸ்கேன் செய்தால், இதர விபரங்கள் லிங்க் மூலம் கிடைக்கும். நமக்கு தேவையான சேவைகளை இதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்