ஆழ்வார்திருநகரி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்

வைகுண்டம், ஜூன் 22: ஆழ்வார்திருநகரி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கோழி கழிவுகள் கொட்டப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆழ்வார்திருநகரி பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் அனைத்தையும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சேகரித்து வளம் மீட்பு பூங்காவில் கொண்டு சேர்க்கின்றனர். குறிப்பிட்ட இடங்களில் குப்பைகளை தினமும் அகற்றும் தூய்மை பணியாளர்கள், தாமிரபரணி ஆற்றின் இடையே கட்டப்பட்டுள்ள பாலத்தின் அடிப்பகுதியில் கொட்டப்படும் கோழி கழிவுகளை அகற்றுவதே இல்லை. தாமிரபரணி ஆற்றின் உட்பகுதியில் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்ட உறைக் கிணறுகள் உள்ளன. ஆழ்வார்திருநகரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், பாலத்தின் கீழ்பகுதி வழியாக தான் தினமும் குளிக்கச் செல்கின்றனர்.

இந்நிலையில் கோழி கழிவுகள் அகற்றப்படாததால் அப்பகுதியில் மட்டுமின்றி தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு நோய்களை உண்டாக்கும் வகையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த இடத்தில் தனியார் வாகனத்தில் வந்து கோழி கழிவுகளை சிலர் கொட்டிச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்போதைய பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன் ரெங்கசாமி நேரடியாக ஆய்வு மேற்கொண்டு கோழி கழிவுகளை கொட்டிய வாகனத்தை பறிமுதல் செய்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார். அதன் பின்னர் கோழி கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய நிர்வாகத்தினரின் தொடர் அலட்சியத்தால் ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் கோழி கழிவுகள் கொட்டப்பட்டு தேங்கி கிடக்கின்றன. எனவே இவற்றை உடனடியாக அகற்றுவதுடன் அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்து கோழிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெகிழிக்கும் பஞ்சமில்லை
நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் கேரிபேக்குகளை பயன்படுத்தக் கூடாது என அரசு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சிறப்பு திட்டமாக மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அத்திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கேரிபேக்குகளின் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதுடன் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் குப்பைகளோடு குப்பையாக பிளாஸ்டிக் கேரி பேக்குகள் அதிகளவில் கிடக்கின்றன. கேரிபேக்குகள் ஒழிப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆழ்வார்திருநகரி பேரூராட்சிக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்