ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகாசி அவதார திருவிழா தேரோட்டம்

வைகுண்டம், ஜூன் 2: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
வைகுண்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள சுவாமி நம்மாழ்வார் அவதார ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் நவதிருப்பதிகளில் குருவுக்கு அதிபதியாக விளங்குகிறது. நம்மாழ்வார் அவதார தினமான வைகாசி விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பிரமோற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளும் வீதியுலா நடைபெற்றது.

5ம் நாள் நிகழ்ச்சியாக நவதிருப்பதி சுவாமிகளுக்கு நம்மாழ்வார் மங்களாசாசனமும், நள்ளிரவில் நவதிருப்பதி பெருமாள்களின் கருடசேவையும் நடைபெற்றது. 9ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடைபெற்றது. பின்னர் சுவாமி நம்மாழ்வார் 7.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு 8.10 மணிக்கு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தேரடி வீதிகளை சுற்றி வந்த தேர் மீண்டும் 9.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. 10ம் திருவிழாவை முன்னிட்டு இன்று 2ம் தேதி காலை மாடவீதி புறப்பாடு, சிங்கபெருமாள் சன்னதியில் திருமஞ்சனம், தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி, பெரிய சன்னதிக்கு எழுந்தருளி கோஷ்டி, தீர்த்த விநியோகம் நடக்கிறது. இரவு வெட்டிவேர் சப்பரத்தில் வெள்ளி தோளுக்கினியன் வாகனங்களில் சுவாமி பொலிந்து நின்றபிரான் நம்மாழ்வார் உடையவர் ஆகியோர் வீதியுலா நடக்கிறது. தேரோட்டத்தில் மாவட்ட அறங்காவர் குழு தலைவர் பார்த்திபன், கோயில் செயல் அலுவலர் அஜித், தக்கார் கோவலமணிகண்டன், வானமாமலை ராமானுஜ ஜீயர், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னாள் பேருராட்சி தலைவர் ஆதிநாதன், அதிமுக நகர செயலாளர் செந்தில்ராஜகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்