ஆலந்தூர் – ஜெயந்த் டெக் பூங்கா வரை மெட்ரோ இணைப்பு வாகன சேவை

சென்னை, ஜன.20: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணைப்பு வாகன சேவைகள் சென்னை முழுவதும் உள்ள பல ஐ.டி பூங்காக்களில் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நகர பயணிகளுக்கு அவர்களின் பணியிடத்திலிருந்து அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இணைப்பு வாகன சேவைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனியார் கேப் நிறுவனத்துடன் இணைந்து மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜெயந்த் டெக் பூங்காவில் பணிபுரிவோரின் போக்குவரத்து நலன் கருதி அவர்களுக்கான மெட்ரோ இணைப்பு வாகன சேவையை தொடங்கியுள்ளது.
இந்த சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் எஸ்.சதீஷ்பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, தனியார் கேப் நிறுவன நிர்வாக இயக்குனர் அம்பிகாபதி, ஜெயந்த் டெக் பார்க் நிறுவனத்தின் மேலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் ஜெயந்த் டெக் பார்க், மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை நந்தம்பாக்கம் இடையே தோராயமாக 5 கி.மீ நீளத்திற்கு, சாலை போக்குவரத்து நெரிசலின் அடிப்படையில் 15 முதல் 20 நிமிடங்களில் இணைப்பு வாகன சேவை இயக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணைப்பு வாகன சேவை குளிரூட்டப்பட்ட 18 இருக்கைகள் கொண்டது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இயக்கப்படும். இந்த இணைப்பு வாகன சேவை இயக்கப்படும் நேரம் பயணிகளின் தேவைக்கேற்ப மாறுதலுக்கு உட்ப்பட்டதாகும். இதற்காக, தனியார் கேப் மொபைல் அப்ளிகேஷனில் மெட்ரோ கனெக்ட் சேவையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பயணிகள் மெட்ரோ இணைப்பு வாகன சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு பயணத்திற்கு ஒரு நபருக்கான கட்டணம் ரூ.35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு வாகன சேவை தினசரி பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்