ஆதிரை முதல்வனும் ஆருத்ரா தரிசனமும்

ஆருத்ரா தரிசனம் : 30 – 12 – 2020திருவாதிரை நோன்பு என்பது தட்சிணாயன  காலத்தின் இறுதி மாதமாகிய மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு  கூடிய நிறைமதி நாளில் மேற்கொள்ளப்படும் நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை  வழிபாட்டுக்குரிய பத்து நாட்களுள் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை  அமைகின்றது. நட்சத்திரங்களில் ‘திரு’ என்ற அடைமொழியோடு வருவன ஆதிரை  நட்சத்திரம், ஓணம் நட்சத்திரம் என்னும் இரண்டுமே ஆகும். இவற்றுள் ஓணம்  திருமாலுக்குச் சிறப்புடையது. திருவாதிரை தில்லைக்கூத்தனாகிய  நடராசருக்குரிய சிறப்பான நாள் ஆகும். அதனைக் கருத்தில் கொண்டே சிவபெருமானை  ‘ஆதிரையின் முதல்வன்’ என்றும் ‘ஆதிரையான்’ என்றும் போற்றுகின்றனர். தமிழில்  ‘திருவாதிரை’ என்று கூறப்படும் நட்சத்திரமே வடமொழியில் ‘ஆர்த்ரா’ என்று  அழைக்கப்படுவதாகும். இதுவே ‘ஆருத்ரா’ எனப்பட்டது. தில்லைக்  கூத்தனாகிய சிவபெருமான்  நூற்றியெட்டு  நடனங்களை ஆடியிருக்கின்றார்.  இவற்றுள் சிவபெருமான் மட்டும் தனித்து ஆடியவை நாற்பத்தெட்டு ஆகும்.  பார்வதியோடு சேர்ந்து ஆடியவை முப்பத்தாறு ஆகும். திருமாலுடன் சேர்ந்து  ஆடியவை ஒன்பதாகும். முருகப் பெருமானுடன் சேர்ந்து ஆடியவை  மூன்று ஆகும்.  தேவர்களுக்காக சிவபெருமான் ஆடியவை  பன்னிரண்டு ஆகும். இவ்வாறு  நூற்றியெட்டு நடனங்களை ஆடிய சிவபெருமானே சிதம்பரத்தில்  அருள்பாலிக்கின்றார். இவர் இத்தலத்தில் ஆடும் ஆனந்த தாண்டவத்தை  தரிசிப்பவர்கள் முக்திநிலையைப்பெறுவர். இத்தகைய தாண்டவத்தைக் கண்டு  இறைத்திருவருளைப் பெறுவதற்கு உரிய நாட்களுள் சிறப்புடையது ஆருத்ரா தரிசன  நாளாகும். சிவபெருமான் தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த)  நாள் ஆருத்ரா நன்னாளாகும். அந்தவகையில், மார்கழி மாதத்  திருவாதிரை  நட்சத்திர நாளில், சிதம்பரத்திலும் மற்ற சிவாலயங்களிலும் நடைபெறும் ஆருத்ரா  தரிசனவிழா மிகச் சிறப்புடையது ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆதிரைத்  திருநாளை திருஞானசம்பந்தர் தன் பதிகத்தில் போற்றிப் பாடுவார். “ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்”தமிழ்  இலக்கியங்களில், தமிழ்ச்சமய மரபில் கடவுளர்கள் இம்மண்ணுலகில் பிறந்ததாய்க்  குறிக்கப்படுகின்றனர். ஆனால், சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாத  அருட்பெருஞ்சோதியாய்ப் போற்றப்படுகின்றார். எனவே தமிழ் இலக்கியங்கள்  சிவபெருமானைப் ‘பிறவாயாக்கைப் பெரியோன்’ எனச் சிறப்பிக்கின்றன. இத்தகைய  பெருமையினை உடைய சிவபெருமானுக்கு ஆதிரை நட்சத்திரம் அமைந்ததற்கான  காரணத்தினைப் புராணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.தாருகாவனத்து  முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். அதில்  முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு  என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். பிச்சாடனர் வேடமேற்றுப் பிச்சை எடுக்கச் சென்ற சிவபெருமான் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்து  கொண்டார். உடுக்கை, மான், தீப்பிழம்பு போன்றவற்றைத்தான் தரித்துக் கொண்டு  முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி தாருகாவன  முனிவர்களுக்குத் தான் உலகின் முதற்பொருள் என்னும் உண்மையை உணர்த்தினார்.  இதுவே ஆருத்ரா தரிசனம் என்று சொல்லப்படுகின்றது.ஒரு காலத்தில்,  திரேதாயுகா எனும் பெண், பார்வதி தேவியினைத் தன் தெய்வமாகக் கொண்டு  வழிபட்டு வந்தாள். அவளுக்குக் குறித்த பருவத்தில் நல்ல மணவாளனுடன் திருமணம்  நடந்தது. ஆனால், திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன்  இறந்து விட்டான். திரேதாயுகா துன்பம் தாழாது வருந்தினாள். மேலும், தான்  வழிபட்ட பார்வதியிடம் சென்று உன்னைக் கனவிலும் நினைவிலும் மறவாது வழிபட்டு  வரும். எனக்கு இத்தகைய துன்பம் வரலாமா? உன்னை மறவாது வழிபட்டுப்  போற்றியதற்கு என்ன பயன் எனக் கூறிப் புலம்பி நின்றாள். அப்போது  கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி, திரேதாயுகா துன்பத்தில்  புலம்பியதைக் கேட்டு அவளின் துன்பத்தினைப் போக்கத் தீர்மானம் செய்தாள்.  உடன் எவ்வாறேனும் தன் பக்தையின் கணவன் உயிரினை மீட்டுத் தருவேன் என்று  தீர்மானம் செய்தாள். பார்வதியின் தீர்மானத்தைக் கண்ட சிவபெருமான்  எமலோகத்தைத் திரும்பிப் பார்த்தார். அப்பார்வையில் சிவபெருமானின் கோபம்  வெளிப்பட்டு நின்றது. அதனைக் கண்டு பதறிப்போன எமன் சிபெருமானின் கோபத்தின்  காரணத்தைப் புரிந்து கொண்டு திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர்  கொடுத்தார். தன் கணவன் அம்பிகையின் திருவருளால் உயிருடன் மீண்டதைக் கண்ட  திரேதாயுகா பெரிதும் மகிழ்ந்தாள். பார்வதியும் சிவபெருமானும்  திரேதாயுகாவுக்கும், அவள் கணவனுக்கும் தரிசனக்காட்சி கொடுத்து  ஆசீர்வதித்தனர். இவ்வாறு சிவபெருமான் தரிசனம் கொடுத்த  நிகழ்ச்சியானது   மார்கழி மாதத் திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு  ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.சேந்தனார் படைத்த  திருவாதிரைக்களி:திருவதிரைத்திருநாளில்  தில்லைக் கூத்தனுக்குப் படைத்து வழிபடப்படும் பொருள்களுள் தனித்த  சிறப்பிடம் பெறுவது ‘திருவாதிரைக் களி’ என்பதாகும். இதனை இறைவனுக்குப்  படைத்து வழிபடல் மரபாகப் பின்பற்றப்படுகின்றது. இதற்குக் காரணமான அடியவர் சேந்தனார் ஆவார். சேந்தனார் திருவெண்காட்டிற்கு அருகிலுள்ள நாங்கூர் என்ற ஊரில் தோன்றியவர் ஆவார்.  இவர் பட்டினத்து அடிகளிடம் தலைமைக் கணக்கராகப் பணியாற்றியவர். பட்டினத்தார் தன் மகன் மூலம் காதறுந்த ஊசியும் கடைவழிக்கு  வாராது என்கிற ஞானத்தினை உணர்ந்து தெளிந்தார். உடன் தான் இதுகாலம் வரை சேர்த்து வைத்திருந்த பொருட்களை எல்லாம் மக்களுக்கு வழங்கும்படி தன் கணக்காளராகிய சேந்தனாருக்குக் கட்டளையிட்டார். சேந்தனாரும் பட்டினத்தாரின் ஆணைப்படி  அவரது கருவூலத்தைத் திறந்து எல்லோரும் அவரவர் விரும்பிய வண்ணம், அதிலுள்ள  பொருள்களை அள்ளிக்கொண்டு செல்லுமாறு செய்தார். அதனைக் கண்ட பட்டினத்தாரின் சுற்றத்தினர் சேந்தனார் மேல் கோபம் கொண்டனர், உடனே சோழ மன்னனிடம் சென்று சேந்தனாரின் செயலை எடுத்துக் கூறி அவரைத் தண்டிக்குமாறு  முறையிட்டனர். அவர்களின் முறையீட்டைக் கேட்ட சோழ மன்னன் சேந்தனாரைச்  சிறையிலிடும்படி ஆணை பிறப்பித்தான். மன்னனின் ஆணைக்கிணங்க சேந்தனார் கைது செய்யப்பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். இச்செய்தியினைக் கேள்வியுற்ற  பட்டினத்தார்,“மத்தளை தயிருண் டானும் மலர்மிசை மன்னினானும்நித்தமும் தேடிக் காணா நிமலனே அமல மூர்த்திசெய்த்தளைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்டகைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண் காட்டுளானே” – எனப் பாடி இறைவனை வேண்டினார். சேந்தனார்  பட்டினத்தாரின் திருவருளால் சிறையினின்றும் விடுதலை பெற்றார். பின்னர்,  தன் மனைவி குழந்தைகளுடன்   தில்லை எனப்படும் சிதம்பரத்திற்குச் சென்று  விறகு வெட்டி விற்று அதன் மூலம் வரும் பொருளைக் கொண்டு வாழ்வு நடத்தி  வந்தார். அத்தகைய நிலையிலும் நாள்தோறும் விறகு விற்றுக் கிடைத்த  பொருளிலிருந்து ஒரு சிவனடியார்க்கு  உணவு வழங்கும் திருத்தொண்டினைச் செய்து  வந்தார். இத்தகைய அரும்பணியில் சேந்தனார் ஈடுபட்டிருந்த காலத்தில்    ஒரு  நாள் அதிகமாக மழை பெய்யத் தொடங்கியது. அதனால் விறகுகள் ஈரமாயின. எனவே,  சேந்தனாரால் அன்று விறகு விற்க முடியவில்லை. அதனால் உணவு தயார் செய்வதற்கு  அரிசி வாங்குவதற்கான பொருள் அவரிடத்தில் இல்லை. எனவே, அன்று கேழ்வரகில் களி  செய்து சிவனடியாருக்குப் படைக்க எதிர்பார்த்திருந்தார். ஆனால், சிவனடியார்  யாரும் அவருக்குத் தென்படவில்லை. சிவனடியாருக்கு நாள்தோறும் உணவு  படைக்கும் தன் பணி தடைபட்டதை எண்ணி  சேந்தனார் மிகவும்  துன்புற்றார். அடியவரின் மனம் துன்புறுவதைப் பொறுக்காத கருணை மனம் கொண்ட அருட்பெரும்  சோதியான தில்லைக்கூத்தன் சிவபெருமான்  சேந்தனாரின் பக்தியை உலகிற்கு  உணர்த்த ஒரு சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் சென்றடைந்தார். அவரைக்  கண்ட சேந்தனார் தன் துன்பம் நீங்கி அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப்  படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுடன் எஞ்சியிருந்த  களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்று தில்லை  அம்பலத்தில் மறைந்தருளினார். மறுநாள் காலை சிதம்பரம் கோயில் கருவறையைத்  திறந்த  தில்லைவாழ் அந்தணர்கள்  நடராசப் பெருமானைச் சுற்றிக் களிச்  சிதறல்கள் இருப்பதனைக் கண்டனர். உடனே, அச்செய்தியை அரசனுக்குத்  தெரிவித்தனர். அரசன் கனவில் நடராசப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத்  தெரிவித்து இருந்தார். அரசனும் அன்று இரவு தான் கண்ட கனவை மனத்துள்  சிந்தித்து சேந்தனாரின் பக்தித் திறத்தினைப் போற்றினான். இவ்வாறு  தில்லைக்கூத்தன் எளியவர்க்கும் எளியனாய் வந்து சேந்தனார் அன்புடன் அளித்த  களியினை உண்ட செய்தியினை,“பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசெம்பொ னம்பலத்துவேந்தன் தனக்கன்றி யாட்செய்வ தென்னே! விரிதுணிமேல்—————————————————————————–சேந்தன் கொடுக்க, வதுவும் திருவமிர் தாகியதே” –  எனக் கோயில் திருப்பண்ணியர் விருத்தம் குறிப்பிடும். மேலும் இப்பாடலானது  சேந்தனார் கொடுத்த அந்தக் கேழ்வரகுக் களியானது தேவர்களின் அமிழ்தத்தைப்போல்  ஆண்டவனுக்கு இனித்தமுடையதாய் அமைந்திருந்தது என்றும் குறிப்பிடுகின்றது.  சேந்தனாரின் இத்தகைய செயலானது, “அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழைஅவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க – அவிழ்ந்த சடைவேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பின்சேந்தனார் செய்த செயல்”- எனத் திருக்களிற்றுப்படியாரிலும் கூறப்பட்டுள்ளது. சிவஞான யோகிகள்,“தவிட்டமுதம் சேந்தன் இட உண்டனை”- எனக் கூறிப் போற்றுவார். சேந்தனாரின்  பக்தித்திறத்தினைப் போற்றிய மன்னன் சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி  அமைச்சருக்கு ஆணையிட்டான். ஆனால், சேந்தனாரோ, அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற  நடராசப் பெருமானின் தேர்த் திருவிழாவினைக் கண்டு வணங்க வந்திருந்தார்.  தில்லைக் கூத்தனை தேரில் எழுந்தருளச் செய்து மன்னன் உள்ளிட்ட  மந்திரிகுழாமும் ஏனையோரும் முன்னின்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  ஆனால், சேந்தனாரின் பக்தித் திறத்தினை உலகிற்குக் காட்ட நினைத்த  சிவபெருமான் மழைநீர்ச் சேற்றில் தேரை அழுந்தச் செய்தார். தேர்மன்னன்  உள்ளிட்ட அனைவரும் இழுக்க சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனம்  வருந்தினார். அப்போது வானில் எழுந்த அசரீரி “சேந்தா நீ பல்லாண்டு பாடு”  என்றது. அதனைக் கேட்ட  சேந்தனாரோ ஒன்றும் அறியாத நான் எப்படிப் பாடுவேன்?  என்று நடராசப் பெருமானை வணங்கி நின்றார். சிவபெருமானும் அவருக்கு அருள்புரிந்தார். சேந்தனார் இறைவன் அருளால், திருத்தில்லை என்றும்  நிலைபெறுவதற்கும் அடியார்கள் பல்லாண்டு வாழ்வதற்கும் இறைவனுக்கு அடிமை செய்ய விரும்பாதவர்கள் இல்லாதொழிவதற்கும் பொன்மயமான மண்டபத்தில் உலகமெலாம் நிலைபெறுமாறு நின்ற, உமாதேவியின் தலைவனாகிய சிவபெருமான் அடியவர்களாகிய நமக்கு அருள்பாலித்து பிறவி என்னும் பிணியை நீக்கிக்கொள்ளும் வண்ணம் அடியேனுக்கு தன் திருக்கூத்தாகிய அருளைப் பொழிந்து திருவடி ஞானத்தை அருளியுள்ளான். அந்தப் பித்தனை நாம் பல்லாண்டு வாழ்க! என்று வாழ்த்துவோமாக!  என்னும் பொருள் அமையும் படியான,“மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்                          வஞ்சகர் போயகலப்பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து                     புவனியெல் லாம்விளங்கஅன்ன நடைமட வாள்உமை கோன்அடி                         யோமுக் கருள்புரிந்துபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த                             பித்தற்குப்பல்லாண்டு கூறுதுமே.”                       – என்ற திருப்பல்லாண்டினைப் பாடத் தொடங்கினார். மேலும், சேந்தனார் இப்பல்லாண்டில் ஆதிரைத் திருநாள் விழாவின் ஆருத்ராதரிசன நிகழ்வினையும் சுட்டுகின்றார். இறைவனின் திருக்காட்சியினைக் காண அழகிய ஆதிரைத் திருநாளில்  தேவர் கூட்டத்தில் யார்? யார்? தரிசனம் செய்ய வந்தனர் எனவும்  குறிப்பிடுகின்றார் சேந்தனார். முப்பெரும் தேவர்களுள் ஒருவராகிய திருமால் வந்து ஆதிரைநாளில் தில்லைக்கூத்தனை வணங்கி நின்றார். மேலும் நான்முகன், அக்கினி, சூரியன், இந்திரன் முதலியோரும் வந்து வணங்கினர். தேரோடும்  வீதியின் நால்திசையும் தேவர் கூட்டத்தினர் நிறைந்து இருந்தனர். அவர்களோடு  சேர்ந்து அடியவர்களாகிய நாமும் நிலவுலகம் நிறைய நின்ற சிவபெருமானின் பழமையான புகழினைப் பாடியும் அப்பாட்டிற்கு ஏற்றாற்போல் ஆடியும் ஆதிரைநாளில் பல்லாண்டு கூறி வாழ்த்துவோம்! என்பதாகப் பாடிப் போற்றுகின்றார். இவ்வாறு  ஆதிரைநாளின் ஆருத்ரா தரிசனச் சிறப்பினைக் கூறும் சேந்தனாரின் பாடல்,“ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்அணியுடை ஆதிரைநாள்நாரா யணனொடு நான்முகன் அங்கிஇரவியும் இந்திரனும்தேரார் வீதியில் தேவர் குழாங்கள்திசையனைத்தும் நிறைந்துபாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்பல்லாண்டு கூறுதுமே.”            – என்பதாகும். இவ்வாறு  சேந்தனார் ‘பல்லாண்டு கூறுதுமே’ என்பதாய் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே நின்ற சிவபெருமானின் திருத்தேர் நகர்ந்தது.  சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து  வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராசப் பெருமானே வந்தார் என்பதை அறிந்து மனமுருகினார். சேந்தனாரின் அன்பெனும் பிடியுள் அகப்பட்டு சிவபெருமான் களியுண்ட நாள் திருவாதிரை நாள் என்பதனால் இன்றும் ஆதிரை நாளில்  நடராசப் பெருமானிற்குக் களி உணவாகப் படைக்கப்படுகின்றது.ஆடல்வல்லானாகிய நடராசப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிடேகம் செய்ய  வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன. இத்தகைய அபிடேகமானது மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் நடைபெறும். இதில் மிகச்சிறப்பானது மார்கழித் திருவாதிரை ஆகும். மற்றவை சித்திரை திருவோணமும், ஆனி உத்திர நட்சத்திர நாட்களும் ஆகும். இவை தவிர ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிடேகம் நடைபெறும். தில்லைக் கூத்தனுக்கு நடைபெறும் அபிடேக நாட்களுள் சிறப்புடையதாகிய மார்கழித் திருவாதிரை நாளில் அபிடேகம் கண்டு ஆருத்ரா தரிசனம் செய்து பிறவிப் பயன்  பெற்று உய்வோமாக!“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்புனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே”திருநாவுக்கரசர்முனைவர் மா. சிதம்பரம்…

Related posts

எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!

திருவைகுந்த விண்ணகரம் வைகுந்தநாதப் பெருமாள்

அரிமேய விண்ணகர குடமாடுங்கூத்தன்