ஆசாத் பாலம் அருகே படகு செல்ல ஏதுவாக கோரையாற்று மணல் திட்டை அகற்ற வேண்டும்

 

முத்துப்பேட்டை, ஜூன் 22: ஆசாத் பாலம் அருகே படகு செல்ல ஏதுவாக கோரையாற்று மணல் திட்டை அகற்ற வேண்டும் என்று அமைச்சரிடம் பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் மனு அளித்துள்ளார். முத்துப்பேட்டைக்கு வந்த தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரனை சந்தித்து, பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, முத்துப்பேட்டையில் அமைந்துள்ள அலையாத்திக்காடு உலக சிறப்பு வாய்ந்தது என்பதை தாங்கள் அறிந்ததே. அது முழுக்க முழுக்க வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதனால் அலையாத்திக்காட்டை காண வரும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையின்கீழ் இயங்கும் படகுகள் மூலம் மட்டுமே, பக்கத்தில் உள்ள ஜாம்புவானோடை கிராமத்திலிருந்து செல்லும் படகு மூலம் சென்று பார்த்து வர அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் ஜாம்புவானோடை கிராமப்பகுதிக்குள் சென்று படகு இறங்குதளத்தை அடைவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

மேற்படி சுற்றுலா பயணிகள் வசதிக்காகவும், சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையிலும் முத்துப்பேட்டை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட ஆசாத்நகர் பாலம் அருகே, படகு இறங்கு தளம் அமைத்து படகுகள் செல்வதற்கு இடையூறாக உள்ள சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரமுள்ள கோரையற்று மணல் திட்டுக்களை தூர் வாரி, அகற்றி படகுகள் சென்று வர ஏதுவாக வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்