அரியலூர் மாவட்டத்தில் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

அரியலூர், டிச.28: அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியையொட்டி நடராஜ பெருமான் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நேற்று நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆண்டு தோறும் நடராஜ பெருமானுக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறும். இதில் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி மாதத்தில் வருகின்ற திருவாதிரை தினம் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது. மேலும் நடராஜப் பெருமாள் அவதரித்த நட்சத்திரம் திருவாதிரை என்பதால் கூடுதல் சிறப்பை பெற்று அன்றைய தினம் திருஉத்திர கோஷமங்கை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதியிலுள்ள சிவாலயங்களில் விடிய விடிய நடராஜப் பெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நிகழாண்டுக்கான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை நடைபெற்றது.இதில் அரியலூர் மாவட்டத்திலுள்ள சகல சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அரியலூர் ஆலந்துறையார் மற்றும் கைலாசநாதர் கோயில்களில் நடைபெற்ற விழாவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அரியலூர் விசுவநாதர், காமாட்சியம்மன், விளாங்குடி கைலாசநாதர், புரந்தான் பிரகதீஸ்வரர் கோயில் அதிகாலை நடை திறக்கப்பட்டு நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிவனடியார்கள் திருவெம்பாவை, திருவாசகம், திருமுறை பதிகங்கள் பாடினர்.திருமானூர் ஒன்றியத்தில் கீழப்பழுவூர் ஆலந்துறையார், திருமழப்பாடி வைத்தியநாதசாமி, திருமானூர் கைலாசநாதர் ஆகிய கோயில்களிலும், செந்துறை ஒன்றியத்தில் சிவதாண்டேஸ்வரர், குழூமூர் குழூமாண்டவர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்