அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு சிகிச்சை பிரிவு: கலெக்டர் துவக்கி வைத்தார்

 

விருதுநகர், மார்ச் 1: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடி மற்றும் போதை மறுவாழ்வு சிறப்பு சிகிச்சைப் பிரிவை கலெக்டர் துவக்கி வைத்தார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநல மருத்துவத்துறையின் கீழ் பத்து படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் குடி மற்றும் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி கவனம் செலுத்தி சிகிச்சை வழங்கிட சிறப்பு பிரிவு துவங்க கலெக்டர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஐந்து படுக்கைகள் கொண்ட குடி மற்றும் போதை மறுவாழ்வு சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. இதனை நேற்று கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். இதில், குடி மற்றும் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சையும், உளவியல் சிகிச்சையும் அளிக்கப்படும். மேலும் போதைப் பழக்கத்தினால் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு தகுந்த குடும்பநல ஆலோசனையும் வழங்கப்படும்.

போதைப் பழக்கத்தில் இருந்து மீள்பவர்கள் வாழ்வின் தரம் உயர்வடைவதோடு குடும்பத்தின் பொருளாதார நிலையும் மேம்படும். எனவே போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீள விரும்புபவர்கள் கட்டணமில்லா இந்த சிறப்பு சிகிச்சை பிரிவை பயன்படுத்தி போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி, துணை முதல்வர் அனிதா மோகன், மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் அருண், அன்புவேல், துணை உள்ளிருப்பு மருத்துவர் முரளிதரன், மன நல மருத்துவர்கள் ஸ்வாதிலட்சுமி, ஆர்த்தி, மருத்துவர்கள் முருகேசன், சயீத் பஹாவுதீன் ஹூசைனி, ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு

திருச்சி அருகே விபத்து கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்

காயங்களுடன் பெண் மீட்பு