அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நிறுத்தம்

காரிமங்கலம், ஜூன் 1: காரிமங்கலம் அருகே, அரசு மேய்ச்சல் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன. காரிமங்கலம் அடுத்த கிட்டேசம்பட்டி பகுதியில், அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்த நிலையில், பலர் வீடுகளையும் கட்டி உள்ளனர். இகடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, சிலர் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சின்னசாமி என்பவர் அதிகாரிகளை கண்டித்து உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, காரிமங்கலம் தாசில்தார் தலைமையில், வருவாய் துறையினர் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் தரப்பிற்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக, முன்னாள் திமுக கவுன்சிலர் சண்முகம் கூறுகையில், ‘கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, அதிகாரிகள் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஒருவர் உயிரிழந்தார். தற்போதும் அதிகாரிகள் அதே போக்கையே கடைப்பிடித்து வருவது ஏற்கத்தக்கது அல்ல. இது தொடர்பாக கலெக்டரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க உள்ளோம்,’ என்றார்.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு