அரசு உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்: நடவடிக்கை எடுக்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

 

விருதுநகர், மே 6: தற்போது விருதுநகர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முதல் கத்திரி வெயில் துவங்கி உள்ளது. எனவே, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை குழந்தைகள், பெரியோர்கள் வெளியே செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுகள் நிறைவடைந்து கோடை கால விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதேவேளையில் தமிழ்நாடு அரசு, வெயிலின் தாக்கத்தை அறிந்து தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடைகால பயிற்சி வகுப்புகள் ஏதும் நடத்தக் கூடாது என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் அரசின் உத்தரவை மீறி பல்வேறு தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 செல்லும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வகணேஷ் கூறுகையில்,“ கடும் வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் நோய்கள் தாக்கக் கூடும். இதன் காரணமாகவே கோடை விடுமுறை பள்ளிகளுக்கு விடப்படுகிறது. பல பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பாடத்திற்கான வகுப்புகள் முன்கூட்டியே நடத்தி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்