அமரர் ஊர்தி டிரைவர் மீது தாக்குதல் குற்றவாளிகளை உடனே கைது செய்யாவிட்டால் போராட்டம்: முத்தரசன் எச்சரிக்கை

சென்னை: அமரர் ஊர்தியை வழிமறித்து டிரைவரை தாக்கிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளும்கட்சியின்  அரசியல் செல்வாக்கு செயல்படுவதாக தெரிய வருகிறது. காவல்துறையின் அலட்சியம்  தொடருமானால் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் இலவச அமரர் ஊர்தி டிரைவர் உதயகுமார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்த ஒருவரின் உடலை ஏற்றிக்கொண்டு, பெருங்களத்தூர் அருகே அமரர் ஊர்தியில் சென்றபோது, இன்னோவா காரை முந்தி சென்றதற்காக கூறப்படுகிறது. இதனால், அந்த காரில் வந்த மாதேஸ்வரன் என்பவர் உள்ளிட்ட மூன்று பேரும் ஆத்திரமடைந்து, அமரர் ஊர்தியை வழிமறித்து அதன் டிரைவர் உதயகுமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், அவருக்கு முதுகெலும்பில் சேதம் ஏற்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அமரர் ஊர்தியில் இருந்த, உடலை இறக்கி வேறு வண்டியில் அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கார் எண், பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை கொடுத்திருந்தும், சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி டிரைவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளும்கட்சியின் அரசியல் செல்வாக்கு செயல்படுவதாக தெரிய வருகிறது. காவல்துறையின் அலட்சியம் தொடருமெனில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேரடி போராட்டங்களில் ஈடுபடும் என எச்சரிக்கிறோம். தாக்குதல் நடத்திய மாதேஸ்வரன் உள்ளிட்ட மூன்று பேரையும் உடனடியாக கைது செய்து உரிய விசாரணை செய்யவும், தேர்தல் ஆணையம் இதன் மீது கவனம் செலுத்துமாறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்கழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

மாம்பழம் சின்னம் கோரி பாமக கடிதம்

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு