அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் 2 மணிநேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் விடுமுறை தினமான நேற்று

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே, 2 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த நிலை மாறி, அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தொடர் அரசு அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.  இந்நிலையில், ஞாயிறு விடுமுறை தினமான நேற்று அதிகாலையில் இருந்தே தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் வெளி பிரகாரம் வரை பொது தரிசன வரிசை நீண்டிருந்தது. அதனால், சுமார் 2 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. அதேபோல், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட கட்டண தரிசன வரிசையிலும் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வருகை அதிகரித்ததால், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்துச் செய்யப்பட்டது.  மேலும், பக்தர்களின் வருகை அதிகரித்திருப்பதால், அதிகாலை முதல் இரவு நடை அடைக்கும் வரை தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கோடை காலம் தொடங்கிவிட்டதால், கோயிலில் பக்தர்கள் வரிசையில் செல்லும் இடங்களில் தரைவிரிப்புகள் போடப்பட்டுள்ளன. மேலும், வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு ஆகியவை கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. விடுமுறை தினமான நேற்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள். அடுத்தபடம்: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் தாகத்தை தணிக்க லெமன் ஜூஸ் வழங்கப்படுகிறது….

Related posts

நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு 2ம் கட்ட கலந்தாய்வு வரும் 18ம் தேதி தொடங்குகிறது

அங்கக சாகுபடியாளர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத்தில்

போளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 40 ஊராட்சிகள் 210 தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்கூடுதல் கலெக்டர் துவக்கி வைத்தார்