அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

 

சோழிங்கநல்லூர், ஏப்.29: நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் பராமரிப்பு பணி காரணமாக, சென்னையின் 3 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும், என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நாளை (30ம் தேதி) காலை 9 மணி முதல் 1ம் தேதி காலை 9 மணி வரை (1 நாள் மட்டும்) குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி மண்டலம்-13 (அடையாறு பகுதி) திருவான்மியூர், பள்ளிப்பட்டு கோட்டூர் கார்டன், ஆர்.கே.மடம் தெரு, இந்திரா நகர், மண்டலம்-14 (பெருங்குடி) கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் மற்றும் மண்டலம்-15 (சோழிங்கநல்லூர்) ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில் நகர், கண்ணகி நகர், காரப்பாக்கம், வெட்டுவான்கேணி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, ஒக்கியம்-துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் 1,514 வழக்குகளில் ₹15.31 கோடி மதிப்பீட்டில் தீர்வு: சமரச அடிப்படையில் நீதிபதிகள் நடவடிக்கை

கொலை வழக்கில் கைதான ரவுடி மீது குண்டாஸ்

ஆர்ப்பாட்டம்