புலவயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்கா அணியில் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ள டெவால்ட் புரூவிஸ், முதல் இன்னிங்சில் குறைந்த பந்துகளில் அரை சதம் விளாசி உலக சாதனை படைத்துள்ளார். தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. நேற்று முன்தினம் முதல் டெஸ்ட் போட்டி துவங்கியது. முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்ரிக்கா அணியில் டெவால்ட் புரூவிஸ், லுவான் ட்ரெ பிரெடோரியஸ் அறிமுக வீரர்களாக இடம்பெற்றனர்.
முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடிய பிரெடோரியஸ் (19 ஆண்டுகள், 93 நாட்கள்) 160 பந்துகளில் 153 ரன் குவித்து, குறைந்த வயதில் சதம் விளாசிய தென் ஆப்ரிக்க வீரர் என்ற சாதனையை 61 ஆண்டுக்கு பின் முறியடித்தார். அதே போல், ஐபிஎல்லில், சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த டெவால்ட் புரூவிஸ், முதல் இன்னிங்சில் 38 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். இதன் மூலம், அறிமுக போட்டியின் முதல் இன்னிங்சில் அதிவேக அரை சதம் விளாசிய வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்தார்.