ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் பெண் தலைவர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக ஒரே வாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி பிரமுகர்கள் 49 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றது முதல் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் பிரமுகர்களை குறிவைத்து ஆந்திர போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 6ஆம் தேதிக்கு பிறகான ஒரு வார காலத்தில் மட்டும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் 680 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியதுடன் 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே வாரத்தில் 49 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள், பிற காட்சிகளை சேர்ந்த பெண் தலைவர்கள் குறித்து தரம் தாழ்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது . ஆனால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரஅரசின் நடவடிக்கைகள் கருத்துரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அவர் கூறியுள்ளார்.