புதுடெல்லி: பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 16 எப்ஐஆர்களையும் ரத்து செய்ய கோரி யூடியூபர் சங்கர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, அதேபோன்று சங்கருக்கு எதிராக இரண்டாவதாக போடப்பட்ட குண்டாசை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது சங்கருடைய தாயார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகிய இரண்டின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன், “ யூடியூபர் சங்கரை பொறுத்தவரை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய நீதிபதிகளுக்கு எதிராகவும், அதேபோன்று ஆண் போலீஸ் மற்றும் பெண் போலீஸ் ஆகியோர்களுக்கு எதிராக அவதூறாகவும், ஆபாசமாகவும் வீடியோவில் பேசியுள்ளார்” என்று தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் பிறப்பித்த உத்தரவில், “யூடியூபர் சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 16 எப்ஐஆர்களையும் கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது. இருப்பினும் அனைத்தையும் ஏன் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க கூடாது. இதனை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் சங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து எப்ஐஆர்களின் விவரங்களையும் ஒரு சிறிய அறிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.