சென்னை: தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருபவர் யூடியூபர் இர்பான். இவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் 1500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அண்மையில் யூடியூப் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் பிரசாந்த், தொகுப்பாளினியுடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது. அந்த வீடியோ போக்குவரத்து காவல்துறையின் கவனத்துக்கு சென்ற நிலையில், நடிகர் பிரசாந்துக்கும், ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்திருந்த தொகுப்பாளினிக்கும் தலா 1,000 ரூபாய் என மொத்தம் 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதே போல யூடியூபர் இர்பான் ஹெல்மெட் அணியாமல் சூப்பர் பைக் ஒன்றை ஓட்டும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நபர் ஒருவர், ‘டூவீலர் விதிகள் சாமானியருக்கு மட்டுமா .. ஒரு பிரபல யூடியூபர் இர்பான், இது போல் விதிமுறைகள் மீறும்போது நடவடிக்கைகள் இருக்காதா .. இல்லை நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு தெரியப்படுத்தலாமே ..’ என கேட்டிருந்தார்.இந்நிலையில், போக்குவரத்து போலீசார் உடனடியாக ஆக்ஷனில் இறங்கினர். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக 1,000 ரூபாய் அபராதமும், ஒழுங்கீனமான நம்பர் ப்ளேட்-க்கு 500 ரூபாய் அபராதம் என மொத்தம் 1,500 ரூபாய் இர்பானுக்கு அபராதம் விதித்தனர்.யூடியூபர் இர்பானுக்கு அபராதம் விதித்தது தொடர்பாக, சென்னை போக்குவரத்து காவல்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளது. மேலும் அந்த பதிவில், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடியுங்கள், உங்கள் பாதுகாப்பே எங்கள் முக்கியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.