நன்றி குங்குமம் தோழி
குடும்பமாக இணையத்தில் கும்மி அடிக்க முடியுமா? முடியும் என்கின்றனர் ‘மாம்ஃப்ளூயன்சர்’ யு டியூப் சேனலில் ‘அம்மா-மகன்-மகள்’ என மூவராய் கலக்கும் கமலா ராணி குடும்பத்தினர். அட, இப்படியும் ஒரு குடும்பமா? என்கிற அளவுக்கு அட்ராசிட்டிகள் அந்தக் குடும்பத்தில் அதிகம். அம்மா கமலாராணி, கல்லூரிக்குச் செல்லும் அவரின் மகன் பிரணவ் மற்றும் +2 படிக்கும் மகள் ஸ்நேகாவுடன் இணைந்து, படுகேஷுவலாக, பக்கத்துவீட்டு பங்கஜம், எதிர்வீட்டு எஸ்தர், கீழ்வீட்டு ராணி என கலந்துகட்டி ஜாலி செய்வது, மொக்கை பண்ணுவதென அதகளம் செய்து வருகிறார். ‘மாம்ஃப்ளூயன்சர்’ கமலா ராணியிடம் பேசியதில்…
‘‘நான் கோவை என்பதால் கொங்கு தமிழ் எனக்கு சுலபமாக வரும். சேனலில் என்னோட ஸ்லாங்தான் பலருக்கும் பிடிக்கிறது. தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பு, சின்ன வயதில் அப்பாவோடு சேர்ந்து வாரம் ஒரு படம் என நிறைய படங்களை தியேட்டரில் பார்த்திருக்கிறேன். என் நடிப்புக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றால் அது தியேட்டரில் படம் பார்த்த நிகழ்வுதான். படங்களை பார்த்து பார்த்தே வளர்ந்ததால் எனக்கு ஸ்கிரிப்ட்டிங், நடிப்புன்னு அது உதவியாக இருக்கிறது. நடிகை கோவை சரளாதான் எனக்கு ரொம்பவே பிடித்த நடிகை. அவர்தான் என்னோட இன்ஸ்பயர்’’ என்ற கமலா ராணியிடம் அவரின் குழந்தைகள் குறித்து கேட்டபோது…
‘‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…’’ என்பது மாதிரி, எங்க வீடு எப்பவுமே ஜாலியான வீடுதான். குடும்பத்தில் ஜாலி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தாலும், எல்லாக் குடும்பங்களில் வருகிற மாதிரி சண்டையும் இருக்கும். சலசலப்பும் இருக்கும். பிரணவ், ஸ்நேகாவுடன் ஃபன் செய்துகிட்டே ஜாலியா, ஃப்ரெண்ட்லியா லைஃபைக் கொண்டு போகிறேன். நான் சொன்னா ரெண்டுபேரும் கேட்டுப்பாங்க’’ என விரல் உயர்த்தி தம்ஸ்அப் காட்டியவர், ‘‘என் குழந்தை எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும், அதிகமா மார்க் வாங்கணும் என்கிற எண்ணம்தான் குழந்தை வளர்ப்பில் பெரிய சிக்கல். குழந்தைகள் மீது அழுத்தங்களை திணிக்கிற பெற்றோர்களைத்தான் அதிகம் பார்க்கிறோம்.
நானும் அப்படியெல்லாம் இருந்த அம்மாதான். ஆனால், என் குழந்தைகள் வளர வளர, நம்முடைய எதிர்பார்ப்பை அவர்களிடம் திணிப்பது சரியில்லையெனப் புரிய ஆரம்பித்தது. அவர்களுக்கு என்ன முடியும் என்பது, அவர்கள் வளர வளர எனக்கு புரிய ஆரம்பித்தது.படிக்கிற பிள்ளைதான் உசத்தின்னு நான் சொல்லவே மாட்டேன். பிரணவ், ஸ்நேகா இருவருக்குமே ப்ளஸ், மைனஸ் ரெண்டுமே இருக்கு. குழந்தைக்கென ஒரு நேச்சர் இருக்கும். அதற்கென ஒரு விருப்பமும் இருக்கும். நல்லா படிச்சு மார்க் வாங்குற குழந்தைகள் மட்டும்தானா புத்திசாலி? ஸ்நேகா எப்பவுமே ரேங்க் ஹோல்டர்தான். எதைக் கொடுத்தாலும் படிச்சு அதை அப்படியே எழுதி மார்க் எடுத்துட்டு வந்துருவா.
ஆனால், பிரணவ் புக்வார்ம் செய்கிற டைப் கிடையாது. ஆவ்ரேஜ் ஸ்டூடென்ட்தான். சப்ஜெக்ட் ஓரியன்டெட்டாக இல்லாமல் எதைப்பற்றி கேட்டாலும் தெரிந்து வைத்திருப்பான். அவனுக்கு என்ன தேவையென நினைக்கிறானோ, எது பிடிக்கிறதோ அதை படித்து தெரிந்துகொள்வான். ஒரு புது இன்பர்மேஷனை அவனிடமிருந்து கண்டிப்பாகத் தெரிந்துகொள்ளலாம். மதிப்பெண்கள் அதிகம் வாங்குவதால் ஸ்நேகாவுக்கு எல்லாமே தெரியும், மதிப்பெண் குறைவாக எடுப்பதால் பிரணவ் நாலேஜ் குறைவானவன் என்று சொல்லவே முடியாது. குழந்தைகளின் திறமை மதிப்பெண் எடுப்பதில் கிடையாது…’’ மகள் ஸ்நேகா பிறந்த பிறகே நான் இதை முழுமையாக உணர்ந்தேன். அழுத்தமாகவே வருகிறது கமலா ராணியின் வார்த்தைகள்.
‘‘இன்றைய பிள்ளைகள் எல்லா விஷயங்களையும் வேகமாக கத்துக்கிறாங்க. டெக்கியாக இருக்காங்க. அதேநேரம் தெளிவாகவும் இருக்காங்க. குழந்தைகள் வளர வளர அவர்களை அனலைஸ் செய்து, நன்றாகவே புரிந்து கொண்டேன்’’ என்றவரிடத்தில், சோஷியல் மீடியா ஃப்ளாட்பார்மில் தங்களின் குழந்தைகள் என்ன செய்கிறார்கள், எதைத் தேடுகிறார்கள் என்பதே பல பெற்றோருக்கு இங்கு தெரியாத நிலை. உயரத்தில் பட்டத்தை பறக்கவிட்டு, நூல் பிடியை தனது விரல் நுனியில் வைத்திருக்கும் அம்மா கமலா ராணியிடம், சிங்கிள் மாமாக உங்களால் எப்படி இதெல்லாம் சாத்தியம் என்ற கேள்வியையும் முன்வைத்தோம்.
‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூரில்தான். +2 படித்தபோது என் பெற்றோரை இழந்தேன். அதனால் ஸ்கூல் டிராப்அவுட் ஸ்டூடென்டாக மாறினேன். இழந்த குடும்பத்தை நினைத்து, எனக்கான புது உறவுகளை உருவாக்கும் முயற்சியில் 19 வயதிலேயே எனக்குத் திருமணம். 21 வயதில் மகன் பிரணவ் பிறந்தான். 25 வயதில் மகள் ஸ்நேகா பிறந்தாள். சின்ன வயதிலேயே அம்மாகிவிட்டதால், என் குழந்தைகளோடு குழந்தையாகவே நானும் வளர்ந்தேன். தம்பி, தங்கையோடு வளர்ந்த ஃபீலிங்தான் எனக்குள் இருந்தது.
சிங்கிள் மதராக அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு, அவர்கள் போக்கிலேயே அவர்களை வளர்த்து, நானும் வளர்ந்தேன் என்றுதான் சொல்லணும். குழந்தை வளர்ப்பில் யாருடைய இன்ஃப்ளூயன்ஸும் இல்லாமல் இருந்ததால், பேரன்டிங் எனக்கு கஷ்டமானதாகத் தெரியவில்லை’’ என்றவரிடத்தில், அவரின் “மாம்ஃப்ளூயன்சர்” சேனல் குறித்த கேள்வியினை முன் வைத்தோம்.
‘‘மகன் பிரணவ்தான் முதலில் சேனல் தொடங்கினான். அவனுக்கு விஷுவல் மீடியா படிப்பதில் ஆர்வம் இருந்தது. +2 முடித்ததும் கல்லூரி படிப்பிற்காக வெளிநாடு செல்லும் எண்ணமும் அவனுக்கு இருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியபோது, கொரோனா லாக்டவுனால் அது நடக்கவில்லை. கிடைத்த இடைவெளியில், ‘ஜஸ்ட் பனானா (Just Banana)’ என்கிற யு டியூப் சேனலைத் தொடங்கி அதில் கன்டென்ட் கிரியேஷன், எடிட்டிங் என ஆர்வம் காட்ட ஆரம்பித்தான்.
கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது அலை என லாக்டவுன் தொடர்ந்ததில், பிரணவ் தொடங்கிய யு டியூப் சேனல் கொஞ்சம் கொஞ்சமாக சப்ஸ்க்ரைபர்ஸ், வியூவர்ஸ் என வளர்ச்சியில் இருந்தது. இதன் தொடர்ச்சியாக மகள் சினேகாவும் அவனுடன் இணைந்து, ‘ஸ்நேகாலிக் (sneholic)’ என்கிற சேனலை ஆரம்பித்து, அதில் வீடியோக்களை அப்லோட் செய்து வந்தாள். மூன்றாவதாக எனக்காக உருவாக்கியதுதான் ‘மாம்ஃப்ளூயன்சர் (momfluencer)’ யு டியூப் சேனல். ஆனால், மூன்று சேனலுக்கும் புரொபரைட்டர் பிரணவ்தான்.
லாக்டவுன் முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக நார்மல் வாழ்க்கைக்குள் நுழைந்தபோது, பிரணவ் வெளிநாடு செல்லும் எண்ணத்தையே மூட்டை கட்டிவிட்டு, கெரியரை இங்கிருந்தே மேலே கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டான். கோவை கல்லூரி ஒன்றில் விஸ்காம் படித்துக்கொண்டே, சேனல்களை இயக்கவும் ஆரம்பித்தான். ஸ்கிரிப்டிங், டைரக்ஷன், எடிட்டிங்கில் பிரணவ் பக்கா.
வாய்ஸ் மாடுலேஷன், மோனாக்டிங் என எல்லாவற்றையும் எனக்கு பிரணவ்தான் சொல்லித் தந்து என்னை இயக்குகிறான். ஸ்கிரிப்ட்டினை எழுதிவிட்டு, குடும்பமாக உட்கார்ந்து பிளான் செய்வோம். என்னுடைய மாம்ஃப்ளூயன்சர் சேனலுக்கான ஸ்கிரிப்ட் ரைட்டிங், சேனல் புரோமோஷன், கமென்ட்ஸ்கான ரிப்ளை என மற்ற எல்லாவற்றையும் செல்ஃப் டெவலப்டாக நானே செய்கிறேன். ஜஸ்ட் பனானா 5 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ், ஸ்நேகாலிக் 6.2 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ், மாம்ஃப்ளூயன்சர் 3 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ்களுடன் சில்வர் பிளே பட்டன்களை பெற்றுள்ளது’’ என்றவரிடத்தில், அவரது மகள் ஸ்நேகா குறித்தும் கேட்டபோது…
‘‘படிப்பில் மட்டும் அவள் அவுட்ஸ்டான்டிங் கிடையாது. நிறைய வாலுத்தனம் செய்து மாட்டி, வகுப்பை விட்டு வெளியே நிற்பதிலும் அவுட்ஸ்டான்டிங்தான் என புன்னகைத்தவர், நன்றாகப் படித்து மார்க் எடுத்துவிடுவதால் ஆசிரியர்கள் அவளை ஒன்றும் சொல்வதில்லை. க்ளாஸ் டாப்பராக இருக்கிறாள். எல்லா எக்ஸ்ட்ராகரிகுலர் ஆட்டிவிட்டியிலும் அவள் பெயரைக் கொடுத்துவிடுவாள். சன் தொலைக்காட்சியில் இருந்து ஒளிபரப்பாகும் ஆதித்யா சேனலில் “காதல் கசக்குதய்யா” என்கிற வெப் சீரிஸில் வாய்ப்பு கிடைத்து, ஸ்நேகா அதில் நடித்திருக்கிறாள். ஸ்கூல் படித்துக்கொண்டே சேனல் ஒன்றுக்கு காம்பியராகவும் இருந்தாள்.
தொடர்ந்து வெப் சீரிஸ், திரைப்படம் என நடிப்பதற்கு அழைப்பு வந்தாலும், ஸ்நேகாவுக்கு பெரிதாக நடிப்பில் ஆர்வமில்லை. 10ம் வகுப்பில் படிப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் கோவையில் இருந்து சென்னை வந்து நிகழ்ச்சி செய்துவிட்டு திரும்புவது சிரமமாக இருந்ததால், படிப்பில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். இப்போது +2 தேர்வை எழுதி முடித்திருக்கிறாள். பிரணவ் அவனுக்கு கிடைக்கும் வருமானத்தில் கல்லூரி கட்டணத்தையும், ஸ்நேகா அவளின் வருமானத்தில் பள்ளிக் கட்டணத்தையும் அவர்களே கவனித்துக்கொள்கிறார்கள்’’ எனப் புன்னகைத்த சூப்பர்மாம் கமலா ராணி குடும்பத்தை வாழ்த்தி விடைபெற்றோம்.
தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்