காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் சி.வி.பூந்தோட்டம் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவரின் 3வயது சிறுமியை கடந்த 28.4.2018 அன்று பாலியல் வன்புணர்வு செய்தது சம்பந்தமாக அப்போதைய இன்ஸ்பெக்டர் சாந்தி, வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். பின்னர், வழக்கின் நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த, வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, நீதிமன்ற காவலர் லதா மற்றும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் மைதிலி தேவி ஆகியோர் தனிக் கவனம் செலுத்தினர்.
இந்த, வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜயகுமாரை, குற்றவாளி என உறுதிசெய்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நசிமா பானு, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, அபராதம் ரூ.2 ஆயிரம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கில் எதிரிக்கு தண்டனை பெற்றுத்தர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் வெகுவாக பாராட்டினார்.