ஆவடி: கல்லால் அடித்து பழைய குற்றவாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர்கள் 6 பேர் கைது ெசய்யப்பட்டனர். சோழவரத்தைச் சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஸ்வரன் (28). பழைய குற்றவாளியான இவர், ஆவடி அடுத்த புதிய கன்னியம்மன் நகரில் வசிக்கும் அக்கா வீட்டுக்கு வந்து சென்றபோது, அப்பகுதி இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி இரவு, தனியார் கல்லூரி அருகே உள்ள மாந்தோப்பில் நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், விக்னேஸ்வரன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இந்த கொலை வழக்கில் அந்த பகுதியைச் சேர்ந்த சூரியகுமார் (26), ஓட்டேரி கார்த்தி (23), ஐயப்பன் (33), ஆனந்த் (24), சாரதி (21), லியாண்டர் (23) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்றுமுன்தினம் சிறையில் அடைத்தனர். போலீசாரின் விசாரணையில் பரபரப்பான தகவல் வெளிவந்தது. அதேபகுதியில் உள்ள லாரி ஓட்டுனர் கோவிந்தன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் வினோத் குமார் ஆகிய இருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2ம் தேதி மாலை கோவிந்தன் வீட்டில் இருந்தபோது, வினோத் குமார் தனது கூட்டாளிகளுடன் வந்து கத்தியால் சரமாரியாக வெட்டியதில், கோவிந்தனின் இடது கை விரல்கள் துண்டானது. இந்த வழக்கில் வினோத் குமார் தலைமறைவான நிலையில், கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கோவிந்தனின் மகன் மகேஷின் நண்பரான இறந்த விக்னேஸ்வரன், வினோத்குமாரை கொலை செய்யும் திட்டத்துடன் 3 நாட்களாக அப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். இதை அறிந்த வினோத் குமாரின் கூட்டாளிகள், விக்னேஸ்வரனை பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைத்துச் சென்று, மது போதையில் மாந்தோப்பில் வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.