திருவாரூர், ஜூலை 29: திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழில் துவங்கிட படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சிதிட்டத்தின் கீழ் 2023&24ம் ஆண்டு இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறையில் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் துவங்குவதை ஊக்குவித்திட 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ஒரு லட்சம் வழங்கிடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி உணவு பதப்படுத்துதல் குறுநிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி மற்றும் வங்கிக்கடன் உதவியுடன் அக்ரிகிளினிக், ஏதாவது ஒரு வேளாண் சார்ந்ததொழில் துவங்கும் 21 முதல் -40 வயதுடைய பட்டதாரிகளுக்கு இத்திட்டத்தின்கீழ் நிதிஉதவிவழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் வேளாண் பட்டாதாரிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்புகொண்டு அக்ரிஸ்நெட் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.