திருவனந்தபுரம்: கேரள சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி சுஜித் தாஸ் ஆகியோர் தங்கக் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருப்பதாக நிலம்பூர் தொகுதி மார்க்சிஸ்ட எம்எல்ஏ அன்வர் குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இவர்களுக்கு முதல்வர் பினராயி விஜயனின் அரசியல் செயலாளர் சசி ஆதரவளிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதைத்தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக்கோரி கடந்த சில தினங்களாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டக்காரர்களில் சிலர் போலீசாரின் தடுப்பு வேலிகளைத் தாண்டி தலைமைச் செயலகத்தில் நுழைய முயன்றனர்.இதையடுத்து போலீசார் அவர்களை தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். போலீசார் மீது கல் வீசப்பட்டன. இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் அபின் வர்க்கியை போலீசார் சுற்றி வளைத்து தாக்கினர். இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் தலைமைச் செயலகம் முன் பல மணிநேரம் பெரும் பரபரப்பு நிலவியது.