புதுடெல்லி: இளைஞர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கும் பாரத் டோஜோ யாத்திரை விரைவில் தொடங்க உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடந்த 2022 செப்டம்பர் முதல் 2023 ஜனவரி வரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டார். அதை தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் இருந்து மும்பைக்கு இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டார்.
தற்காப்பு கலை பயிற்சி அளிக்கும் பாரத் டோஜோ யாத்திரை விரைவில் மேற்கொள்ளவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் போது, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்தபோது, எங்கள் முகாமில் தினமும் மாலையில் ஜியு-ஜிட்சு தற்காப்பு கலை பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். ஆரோக்கியமாக இருப்பதற்கு எளிய வழியாகத் தொடங்கிய செயல்,சமூக நடவடிக்கையாக விரைவாக உருவானது. நாங்கள் தங்கியிருந்த நகரங்களில் என்னுடன் நடைபயணம் மேற்கொண்டவர்கள் மற்றும் இளம் தற்காப்புக் கலை மாணவர்கள் பங்கேற்றனர்.
தியானம், ஜியு-ஜிட்சு, அய்கிடோ போன்ற தற்காப்பு கலைகள் மற்றும் வன்முறையற்ற மோதல்களைத் தீர்க்கும் நுட்பங்களின் இணக்கமான கலையை இளம் மனங்களுக்கு அறிமுகப்படுத்துவதே எங்கள் குறிக்கோளாகும். இந்த தேசிய விளையாட்டு தினத்தில்,எங்களுடைய அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களில் சிலர் இந்த பயிற்சியை மேற்கொள்ள ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். விரைவில் பாரத் டோஜோ யாத்திரை என குறிப்பிட்டுள்ளார். தற்காப்புக் கலை பயிற்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.