சென்னை: இளைஞர் அணியின் பெருமையை நாடே உணரும் வகையில் சேலம் மாநாட்டை நடத்திக் காட்டுவோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு வரும் டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தலைமைக் கழகத்தால் 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்களின் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம், முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சென்னையில் நடந்தது. இதில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: மாநாடு என்பது அடிக்கடி நடைபெறுவது அல்ல.
எப்போதாவது ஒருமுறைதான் நடைபெறுகிறது. திமுக இளைஞர் அணியின் மாநில மாநாடு 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடைபெறுகிறது. அந்த சமயத்தில் நாம் இளைஞர் அணியில் இருக்கிறோம் என்பதே நமக்கான பெருமை. அதுவும் இந்த மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட குழுக்களில் நாம் இடம்பெற்றிருக்கிறோம் என்பது கூடுதல் பெருமை. வரும் டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாடு, நம் இளைஞர் அணியின் பெருமையை, திமுகவின் கட்டமைப்பை இந்திய ஒன்றியமே உணர்ந்து கொள்ளும் வகையில் நடைபெற இருக்கிறது. ஒரு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிடுதல் என்பது மிகமிக அவசியமான ஒன்று.
அந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன என்பதை உணர்ந்தால் தான், அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் அந்த நிகழ்ச்சியை மிகச்சரியாக வடிவமைக்க முடியும். 100 பேர் கூடும் தெருமுனைப் பிரசாரக் கூட்டத்துக்கே, பேச்சாளராக யாரை அழைக்கலாம், என்ன தலைப்பின் கீழ் அவரை பேச வைக்கலாம், பின்னணியில் ஃப்ளெக்ஸ் வைக்கலாமா, எல்இடி வைக்கலாமா? அப்படி வைக்கப்படும் ஃப்ளெக்ஸ் பேனரில் என்னென்ன வாசகங்கள் இடம் பெற வேண்டும். 100 பேர் கூடும் கூட்டத்துக்கே அந்தளவுக்கு திட்டமிடுகிறோம் என்றால், லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடும் நம் இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் எந்தளவுக்கு நேர்த்தியாக திட்டமிடப்பட வேண்டும் என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்திருப்பீர்கள்.
மாநாட்டுக்கான பணிகளை நாம் அனைவரும் இணைந்துதான் செய்யப்போகிறோம். ஆனால் இந்தப் பணியை அவர் பார்த்துவிடுவார், இவர் பார்த்துக்கொள்வார் என்று இருந்து எந்தப் பணியும் விடுபட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டை நடத்துவதற்கு நமக்கு மிகப்பெரிய பலமாக முதன்மைச் செயலாளர் நேரு உள்ளார். பல மாநாட்டை நடத்திய அனுபவம் அவருக்கு உள்ளது. இதில் நாம் என்ன தவறு செய்வோம் என பலர் காத்திருக்கிறார்கள். அதனால் விமர்சனத்துக்கு இடமளிக்காமல், இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்ட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தலைமைக் கழகமே மாநில மாநாட்டையோ, மண்டல மாநாட்டையோ நடத்துவது வழக்கம். ஆனால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மாநாட்டை நடத்தும் மிகப்பெரிய வாய்ப்பை, பொறுப்பை நம் தலைவர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணிக்கு வழங்கியுள்ளார். தலைவர் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நம் செயலின் மூலம் நிரூபிக்க வேண்டியது நம் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.