புதுடெல்லி: வாலிபர் கடத்தல் விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி ஜெயராம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அவரது பணி இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று மறுத்து விட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் அண்ணன் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது தம்பியை ஏ.டி.ஜி.பி ஜெயராம் காரில் கடத்தி சென்று மிரட்டினார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏ.டி.ஜி.பி ஜெயராமை கைது செய்ய உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஏ.டி.ஜி.பி ஜெயராம் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி ஜெயராம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி ஜெயராம் சீனியர் என்பதால் எந்தவித சிறப்பு அனுமதியும் வழங்க முடியாது. இருப்பினும் அவரது பணி இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியுமா என்பது குறித்து அரசிடம் ஆலோசனை நடத்தி தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.
மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘‘ஏ.டி.ஜி.பி ஜெயராமின் பணி இடைநீக்கத்தை ரத்து செய்யவோ அல்லது திரும்ப பெறவோ முடியாது. ஏனெனில் அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்ற கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று சட்ட விதிகளும் தெளிவாக கூறுகிறது என்று திட்டவட்டமாக தெரிவித்த வழக்கறிஞர், ஏ.டி.ஜி.பி ஜெயராமை பணி இடைநீக்கம் செய்த விவரங்கள் அடங்கிய ஆவணங்களை நீதிபதிகள் முன்னிலையில் தாக்கல் செய்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்த வழக்கை ஏதேனும் சிறப்பு விசாரணை பிரிவுக்கு மாற்றம் செய்ய முடியுமா? என்று தமிழ்நாடு அரசு தரப்பில் பரிசீலனை செய்யலாம். ஏனென்றால் இந்த போலீஸ் அதிகாரி தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றத்தின் வேறு ஒரு நீதிபதி கொண்ட அமர்வில் பட்டியலிடலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று கருத்து தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், “இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி விசாரிக்கலாம். அதற்கு எந்தவித ஆட்சேபனையும் எங்களுக்கு கிடையாது. பல்வேறு வழக்குகளின் விசாரணையை எடுத்து, அதில் சில உத்தரவுகளையும் பிறப்பித்து நாங்கள் இப்படிதான் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கட்டாயப்படுத்துவது போன்று உள்ளது. அதில் எந்தெந்த வழக்குகள் என்பது குறித்து தற்போது கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஏ.டி.ஜி.பி தரப்பு வழக்கறிஞர்,‘‘ நீதிமன்ற உத்தரவு அனைத்தையும் ஏ.டி.ஜி.பி பின்பற்றினார். அப்படி இருக்கும் போது ஏன் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். விசாரணைக்கும் அவர் ஒத்துழைத்தார். எனவே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் பணி இடைநீக்கம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “வாலிபர் கடத்தல் மற்றும் ஏ.டி.ஜி.பி ஜெயராம் தொடர்பான விவகாரத்தை சிபிசிஐடி அமைப்பு விசாரிக்க மாற்றம் செய்து உத்தரவிடுகிறோம். சிறுவன் கடத்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை வேறு ஒரு நீதிபதி அமர்வில் பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி ஜெயராமை கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்பு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மட்டும் ரத்து செய்கிறோம். ஏ.டி.ஜி.பி ஜெயராமின் பணி இடைநீக்கம் தொடரும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது” என்று உத்தரவிட்டனர்.