புதுடெல்லி: திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் வாலிபர் ஒருவரின் அண்ணன் காதல் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அந்த வாலிபரை கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக இந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி ஜெயராம் காரில் கடத்தி சென்று மிரட்டினார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்கில் தொடர்புடைய ஏ.டி.ஜி.பி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜெகன் மூர்த்திக்கும் நிபந்தனை பிறப்பித்திருந்தது. இதைத்தொடர்ந்து ஏ.டி.ஜி.பி ஜெயராம் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பூவை ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ஜெகன் மூர்த்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெகன் மூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், இதில் சிறுவன் கடத்தல் விவகாரத்திற்கும் தமக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஜெகன் மூர்த்தி மீது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்பது ஆதாரமற்றவை ஆகும். எனவே இந்த வழக்கில் இருந்து ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. மேலும் அவரை காவல்துறை கைது செய்யக்கூடாது. அதேப்போன்று இந்த வழக்கில் ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. ரூ.25 ஆயிரத்திற்கான பிணைத்தொகை பத்திரத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.