சென்னை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, மாவட்ட ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், 2021ல் பாட்டிக்கு தெரிந்த வாலிபர், வீட்டில் இருந்த சிறுமியை மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமாகி அவருக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், குற்றத்தை மறைத்த சிறுமியின் தாய், அவரது தோழி, 35 வயதான வாலிபர் ராஜா, அவரது தாயார் ஆகிய நான்கு பேரை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியின் தாய், அவரது தோழி, ராஜாவின் தாய் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். ராஜா மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்குவதோடு தமிழக அரசு இழப்பீடாக 15 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.